/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.7 லட்சத்தை அள்ளிச்சென்ற ' டுபாக்கூர் ' போலீசார்!
/
ரூ.7 லட்சத்தை அள்ளிச்சென்ற ' டுபாக்கூர் ' போலீசார்!
ரூ.7 லட்சத்தை அள்ளிச்சென்ற ' டுபாக்கூர் ' போலீசார்!
ரூ.7 லட்சத்தை அள்ளிச்சென்ற ' டுபாக்கூர் ' போலீசார்!
PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

நண்பர்கள் எல்லாரும் வரவும், நாளிதழை மடித்தபடியே, ''புகார் குடுக்க விடாம தடுத்துட்டாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''செங்கல்பட்டுல, ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி இருக்கு... இந்த பள்ளியின், 'அட்மின்' பிரிவுல, 21 வயது இளம்பெண் வேலை பார்த்தாங்க...
''போன மாசம் கோடை விடுமுறையில், இளம்பெண் தினமும் வேலைக்கு போயிட்டு வந்தாங்க... பள்ளியின் தாளாளரான, 50 வயது நபர், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்துல வச்சு, இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்ல ஈடுபட்டிருக்காருங்க...
''அவர்கிட்ட இருந்து தப்பி ஓடிய இளம்பெண், தன் வீட்டுல சொல்லியிருக்காங்க... அதுக்குள்ள, தாளாளருக்கு வேண்டிய உள்ளூரை சேர்ந்த ரெண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருத்தரும் சேர்ந்து, இளம்பெண் தரப்பிடம் சமரசம் பேசி, போலீஸ்ல புகார் குடுக்க விடாம தடுத்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாறி மாறி புகார் குடுத்துட்டு இருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க., கூட்டணி யில், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தொகுதியை கேட்டு வாங்கி, எப்படியும் ஜெயிச்சிடணும்னு மாவட்ட பா.ஜ., புள்ளிகள் பலரும் மனப்பால் குடிச்சிட்டு இருக்காவ...
''இந்த கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான சித்ராங்கதன், சமீபத்தில் ஆறுமுகநேரியில் நடந்த ஒரு திருமணத்துக்கு போயிருக்காரு... திருச்செந்துார் தொகுதிக்கு துண்டு போட்டு வச்சிருக்கிற மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் சிலர், சித்ராங்கதன் கார் மேல, கெட்டுப்போன சாம்பார் பார்சல்களை வீசியிருக்காவ வே...
''இது சம்பந்தமா, சித்ராங்கதன் தரப்புல போலீஸ்ல புகார் குடுத்திருக்காவ... அதுக்கு முன்னாடியே, ராதாகிருஷ்ணனின் தாய் தமயந்தி, போலீஸ்ல குடுத்த புகார்ல, 'என் மேல சித்ராங்கதன் காரை விட்டு மோத பார்த்தார்'னு சொல்லியிருக்காவ... 'ரெண்டு கோஷ்டியையும் மாநில தலைமை கண்டிச்சு வைக்கணும்'னு பா.ஜ., நிர்வாகிகள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''முள்ளங்கி பத்தையாட்டம், 7 லட்சத்தை அள்ளிண்டு போயிட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் பக்கம் கோட்டைக்காரன் பாளையத்தில், ஒருத்தர் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்ட கிளப் நடத்திண்டு இருந்தார்... 'பெரிய அண்ணனுக்கு' தம்பி மாதிரி, மண்ணச்ச நல்லுார் தனிப்பிரிவு போலீஸ்காரர், இந்த தொழிலுக்கு ஒத்தாசையா இருந்திருக்கார் ஓய்...
''சமீபத்துல, தங்களை போலீசார்னு சொல்லிண்டு ரெண்டு பேர் இங்க சோதனைக்கு வந்திருக்கா... உடனே, அங்க சீட்டாடிட்டு இருந்தவா எல்லாம், துண்டை காணோம், துணியை காணோம்னு ஓட்டம் பிடிச்சுட்டா ஓய்...
''அந்த ரெண்டு பேரும் அங்கிருந்த சீட்டுக் கட்டுகள், 7 லட்சம் ரூபாய் பணத்தை அள்ளிண்டு போயிட்டா... அவா போன பிறகுதான், ரெண்டு பேரும், 'டுபாக்கூர்' போலீசுங்கறதும், அவாளை தனிப்பிரிவு போலீஸ்காரர் ஏற்பாடு பண்ணி அனுப்பியதும் தெரியவந்துது ஓய்...
''திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி, கிளப் ஓனரால எங்கயும் புகார் குடுக்க முடியல... ஆனாலும், அரசல் புரசலா விஷயம் மேலதிகாரிகள் காதுக்கு போகவே, அவா விசாரணை நடத்திண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.