/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அமைச்சரிடம் தொகுதியை பறிக்க துடிக்கும் இருவர்!
/
அமைச்சரிடம் தொகுதியை பறிக்க துடிக்கும் இருவர்!
PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

''சொ ந்த கட்சியினரே எதிரிகளா இருக்கான்னு புலம்பறார் ஓய்...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர், 60 வயதான சண்முகசுந்தரம்... கிட்டத்தட்ட, 40 வருஷமா தி.மு.க.,வுல இருக்கற இவர், கட்சியில் சில பொறுப்புகள்லயும் இருந்திருக்கார் ஓய்...
''இவருக்கு சொந்தமான, 110 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரிச்சு சிலர் அபகரிக்க பார்க்கறா... இது சம்பந்தமா, அதிகாரிகளை பார்த்து பலமுறை மனுக்கள் குடுத்தும், பலன் இல்ல ஓய்...
''இவர் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாம, ஆளுங்கட்சி புள்ளிகள் சிலரே முட்டுக்கட்டை போட்டிருக்கா... இதை கேள்விப்பட்ட சண்முகசுந்தரம், 'சொந்த கட்சியினரே எனக்கு எதிரிகளா இருக்கா... இந்த கட்சிக்கு, 40 வருஷமா உழைச்சதுக்கு கிடைச்ச பலன் இதுதான்'னு வேதனையோட புலம்பிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கமிஷனை கண்ணுலயே காட்டலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாநக ராட்சி, தி.மு.க., வசம் இருக்கு... இங்க, குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மாநகராட்சி கட்டடம், சாலை, கழிப்பறை கட்டுமானம்னு, 1,000 கோடி ரூபாய்க்கு திட்ட பணிகள் நடக்குதுங்க...
''ஆனா, 'இந்த பணிகள்ல இருந்து நயா பைசா கூட கமிஷன் வரல'ன்னு கட்சி பேதமில்லாம, 51 கவுன்சிலர்களும் புலம்புறாங்க... '1,000 கோடிக்கு, 1 சதவீதம்னு கணக்கு போட்டாலும், 10 கோடி வரும்... அதை, எல்லா கவுன்சிலர்களுக்கும் பிரிச்சு குடுத்திருக்கலாமே'ன்னு புலம்புறாங்க...
''ஆனா, இந்த பணிக்கான கமிஷன் எல்லாத்தையும், துறையின் மேலிடத்துலயே பேசி வாங்கிட்டாங்களாம்... இதனால கவுன்சிலர்கள், தங்களது வார்டுகள்ல சின்ன சின்ன வேலைகளை செய்ற கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்டு, தகராறு பண்ணிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அமைச்சரிடம் இருக்கும் தொகுதியை பறிக்க பார்க்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் இருக்காருல்லா... இவரது உதவியாளர் ஒருத்தர், அதிகாரிகள் இடமாறுதல், காலேஜ் சீட்டுக் கெல்லாம் பணம் வாங்கி, வசூல் மன்னனா வலம் வந்தாரு வே...
''தன் பெயரை சொல்லி அவர் சம்பாதிச்சதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான அமைச்சர், அவரை விரட்டி விட்டுட்டாரு... ருசி கண்ட பூனையான அவர், தன்னை மறுபடியும் சேர்த்துக்க சொல்லி, அமைச்சர் வீட்டு வாசல்ல தவம் கிடந்தும், பலன் இல்ல வே...
''இதுக்கு இடையில், முன்னாள் உதவியாளரின் மோசடிகளுக்கு பூந்தமல்லி ஒன்றிய தி.மு.க., நிர்வாகி ஒருத்தரும் உடந்தையா இருந்திருக்காரு... இந்த இருவர் அணியும் சேர்ந்து, ஒரு பிளான் போடுது வே...
''அதாவது, நாசர் இப்ப, திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்காரு... இவர் கட்டுப்பாட்டுல ஆவடி, பூந்தமல்லி தொகுதிகள் வருது வே... இதுல, பூந்தமல்லியை உருவி, மதுரவாயல் தொகுதியுடன் சேர்த்து, அந்த மாவட்டத்துக்கு செயலராக பூந்தமல்லி ஒன்றிய நிர்வாகி விரும்புதாரு... இதுக்காக, கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரை சுத்தி சுத்தி வர்றாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சஞ்சய், கமலேஷ் இப்படி உட்காருங்க பா...'' என, நண்பர்களுக்கு இடம் தந்து அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

