/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இடமாறுதலுக்கு வசூல் நடத்தும் தொழிற்சங்க புள்ளிகள்!
/
இடமாறுதலுக்கு வசூல் நடத்தும் தொழிற்சங்க புள்ளிகள்!
இடமாறுதலுக்கு வசூல் நடத்தும் தொழிற்சங்க புள்ளிகள்!
இடமாறுதலுக்கு வசூல் நடத்தும் தொழிற்சங்க புள்ளிகள்!
PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

''சாதாரண எழுத்து பிழையால, கைதிகள் பாதிக்கப்படுறாங்க பா...'' என, புதிர் போட்டபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''குற்ற வழக்கில் கைதானவங்களுக்கு, நீதிமன்றங்கள் ஜாமின் தரும்போது, அதற்கான உத்தரவு நகல்களை சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கும்... அந்த உத்தரவு நகல்ல, கிரைம் நம்பர் எனப்படும், குற்ற வழக்கு எண்களை நீதிமன்ற ஊழியர்கள் சில நேரங்கள்ல தப்பா எழுதிடுறாங்க பா...
''கிரைம் நம்பர் தப்பா இருக்கிறதால, கைதிகளை விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துடுறாங்க... மறுபடியும், நீதிமன்றங்களுக்கு போய் ஊழியர்களிடம் பேசி, கிரைம் நம்பர்களை மாத்திட்டு வந்தால்தான் கைதிகளை விடுவிக்கிறாங்க... இதனால, ஜாமின் கிடைச்ச கைதிகள், அதுவரைக்கும் சிறையில வாட வேண்டியிருக்குது பா...
''இந்த குளறுபடியால, வெள்ளிக்கிழமை ஜாமின் வாங்கினா, திங்கள் கிழமைதான் வெளியில வர முடியும்... நீதிமன்றங்களுக்கு நாலஞ்சு நாள் சேர்ந்தாப்புல விடுமுறை வந்துட்டா, அதுவரை கைதிகள் கம்பி எண்ண வேண்டியது தான்பா...'' என்றார், அன்வர்பாய்.
''விதிகளை மீறி இடமாறுதல் போட்டிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மதுவிலக்கு பிரிவுல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இவங்க, திருப்பூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில், 2023ம் வருஷம் பணியில இருந்தாங்க வே...
''அப்புறமா கோவைக்கு மாறுதல்ல போனவங்க, சில மாதங்கள்லயே தாராபுரம் மதுவிலக்கு பிரிவுக்கு வந்துட்டாங்க... இதுல என்ன விதிமீறல் இருக்குன்னு நீங்க கேக்கலாம்...
''ஏன்னா, இதுபோன்ற முக்கியமான பிரிவுகளுக்கு இடமாறுதல்ல வர்றதுக்குன்னு தனியா விதிகள் வகுத்து அரசாணையே போட்டிருக்காவ...
''அதாவது, மதுவிலக்கு, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகள்ல இருந்தவங்க, மூணு வருஷத்துக்குள்ள மறுபடியும் இந்த சிறப்பு பிரிவுகளுக்கு வர முடியாது...
''ஆனா, தாராபுரம் பெண் அதிகாரியை ஒரே வருஷத்துக்குள்ள மதுவிலக்கு பிரிவுக்கு மாத்தி, இந்த விதியை போலீஸ் உயர் அதிகாரிகள் காத்துல பறக்க விட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'அமைதிக்கு பெயர்தான் சாந்தி...' என்ற பாடலை சில நிமிடங்கள் கண்மூடி ரசித்த குப்பண்ணா, ''டிரான்ஸ்பருக்கு பணம் வசூலிக்கறா ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தமிழக மின்வாரியத்தின் தலைமை அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இருக்கோல்லியோ... தமிழகம் முழுக்க இருக்கற களப்பிரிவு பணியாளர் துவங்கி, உதவிப் பொறியாளர் வரையிலான இடமாறுதல், பதவி உயர்வு, கருணை பணி நியமனங்களுக்கான வேலைகள் இங்கதான் நடக்கறது ஓய்...
''தமிழகத்துல இருக்கற எல்லா முக்கிய கட்சிகளுக்கும், மின்வாரிய தலைமை அலுவலகத்துல தொழிற்சங்கம் இருக்கு...
''இதுல, 'பவர்புல்'லா இருக்கற சங்கத்தை சேர்ந்த நாலஞ்சு பேர் குரூப்பா சேர்ந்து, 'விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கி தரோம்'னு சொல்லி, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தறா...
''இதனால, நேர்மையான முறையில இடமாறுதல் எதிர்பார்க்கற ஊழியர்களுக்கு, அவா கேக்கற இடங்கள் கிடைக்க மாட்டேங்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.