/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பழனிசாமி மாவட்டத்தில் தேறுமா தி.மு.க.,?
/
பழனிசாமி மாவட்டத்தில் தேறுமா தி.மு.க.,?
PUBLISHED ON : ஜூலை 02, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''பழைய போனால அவதிப்படுறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி சேவைகள் பயனாளிகளுக்கு போய் சேருவதை உறுதிப்படுத்தும் வகையில், 'போஷன் டிராக்கர்' என்ற செயலியை, மத்திய அரசு 2018ல் அறிமுகம் பண்ணுச்சு... இதுக்காக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாநில அரசு தரப்புல, 'பவர் பேங்க்'குடன், 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் குடுத்தாங்க பா...
''இந்த போனின் ஆயுள் காலம் மூணு வருஷம் தான்... ஆனா, வருஷம் ஏழாகியும் புது போன்கள் வாங்கி தரல... இப்ப, நிறைய போன்கள் பழுதாகிடுச்சு பா...
''இதனால, 'போஷன் டிராக்கர்' செயலியில், பயனாளர் விபரங்களை பதிவு பண்றது, 'பாஸ் வேர்டு' வர்றதுல பல பிரச்னைகளை அங்கன்வாடி ஊழியர்கள் சந்திக்கிறாங்க... 'புது போன்கள் வாங்கி தர சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை எடுக்கணும்'னு கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''திருப்பணிகள் சரியா நடக்கறது இல்ல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்ல, 30 கோடி ரூபாய்க்கு மேலான செலவுல திருப்பணிகள் நடக்கறது... ஆனா, 'எந்த பணிகளும் உருப்படியா நடக்கல... ஏனோ தானோன்னு நடக்கறது'ன்னு கலெக்டருக்கு ஏகப்பட்ட புகார்கள் போயிருக்கு ஓய்...
''இது தவிர, 'கோவில்ல வழிபாட்டு முறைகளும் சரியா நடக்கல... கோவில் வளாகத்துல சிலை பாதுகாப்பு மையம் இருக்கு... ஆனா, வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்றது இல்ல... அதிகாரிகள் எல்லாம் அலட்சியமா இருக்கா... அமைச்சர் சேகர்பாபு இதை கொஞ்சம் கவனிக்கணும்'னு பக்தர்கள் பலரும் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மூணு பேருக்கு பதவி தந்தும் பலன் இல்லையாமுல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்துல உள்ள 11 சட்டசபை தொகுதிகள்ல, 2021 சட்டசபை தேர்தல்ல, சேலம் வடக்குல மட்டும் தான் தி.மு.க., ஜெயிச்சுது... அங்க ஜெயிச்ச தி.மு.க., மத்திய மாவட்ட செயலரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறை அமைச்சர் பதவி குடுத்திருக்காவ வே...
“மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, சேலம் எம்.பி.,யா இருக்காரு... கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கத்துக்கும் சமீபத்துல ராஜ்யசபா எம்.பி., பதவி குடுத்திருக்காவ வே...
''இப்படி மூணு பேருக்கு முக்கிய பதவிகள் குடுத்தும், மாவட்டத்துல கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கல... முதல்வரின் மருமகன் நிறுவனம் எடுத்த சர்வேயில, '11 தொகுதியிலும் தி.மு.க.,வுக்கு பின்னடைவு'ன்னு அறிக்கை கிடைச்சிருக்கு வே...
''இதனால, மாவட்ட கட்சி நிர்வாகத்தை அஞ்சா பிரிக்க போறாவ... இதன்படி, எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளை சேலம் மேற்கு மாவட்டமாகவும், ஓமலுார், மேட்டூர் தொகுதிகளை சேலம் வடக்கு மாவட்டமாகவும் மாத்த போறாவ வே...
''சேலம் வடக்கு, மேற்கு தொகுதிகளை மத்திய மாவட்டமாகவும், வீரபாண்டி, ஏற்காடு தொகுதிகளை தெற்கு மாவட்டமாகவும், ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகளை கிழக்கு மாவட்டமாகவும் அறிவிச்சு, புதுசா ரெண்டு மாவட்ட செயலர்களை நியமிக்கவும் பிளான் பண்ணியிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.