/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பாலியல் புகாரில் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
/
பாலியல் புகாரில் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

பில்டர் காபியைஆற்றியபடியே, ''டார்ச்சர் அதிகாரியை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டா ஓய்...'' என்றபடியே, அரட்டையை ஆரம்
பித்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருவண்ணாமலை வனக் கோட்டத்தில், சாத்தனுார் வனச்சரகம் இருக்கோல்லியோ... இங்க மரம் நடும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு நடக்கறதா புகார்கள் வந்துண்டே இருந்தது ஓய்...
''அதுவும் இல்லாம, அங்க இருந்த வனச்சரகர், பெண் பணியாளர்களை ரொம்பவே, 'டார்ச்சர்' செய்றதாகவும் புகார்கள் வந்தது... குறிப்பா, இரவு ரோந்துன்னு பெண் பணியாளர்களை அழைச்சுண்டு போய் தொல்லை
பண்ணியிருக்கார் ஓய்...
''இதில் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள், மாவட்ட வன அலுவலருக்கு எழுத்துபூர்வமா புகார் அனுப்பிட்டா... இது சம்பந்தமா நடந்த
விசாரணையை முடக்க, வனச்சரகர் பகீரத பிரயத்தனம் பண்ணினார் ஓய்...
''ஆனா, வேலுார் கோட்ட உயர் அதிகாரி தலையிட்டு, விசாரணையை நேர்மையா நடத்தியிருக்கார்... இதுல, முறைகேடுகள், டார்ச்சர் உண்மை தான்னு
தெரியவர, வனச்சரகரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சீனிவாசன், இந்த பேப்பரை அங்கன வையும்...'' என நண்பரை ஏவிய பெரியசாமி அண்ணாச்சியே, ''பிரேத பரிசோதனைக்கும் கட்டாயமா காசு வாங்குதாவ வே...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் வட்டார தலைமை அரசு மருத்துவமனை இருக்கு... விபத்து, தற்கொலையில
இறக்கிறவங்க உடல்களை இங்க பரிசோதனை பண்ணி தர்றதுக்கு 3,000த்துல இருந்து, 5,000 ரூபாய் வரைக்கும் வசூல்
பண்ணுதாவ வே...
''பணம் தர மறுத்தா, பிரேத பரிசோதனை செய்யாம காலதாமதம் பண்ணி, உறவினர்களை அலைக்கழிக்காவ... 'பிரேத பரிசோதனைக்கான மருந்து, பாடியை கட்டுற துணிக்கு தான் பணம் கேட்கிறோம்'னு ஊழியர்கள் சால்ஜாப்பு சொல்லுதாவ வே...
''ஆனா, எல்லா பொருட்களையும் அரசாங்கமே குடுத்துடுது... இது சம்பந்தமா, மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் தெரிவிச்சும், நடவடிக்
கை இல்ல... கலெக்டர்களம் இறங்குனா தான் தீர்வு கிடைக்கும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''புதிய கமிஷனரிடமாவது தீர்வு கிடைக்குமான்னு காத்திருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சென்னை, தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் கட்டுப்பாட்டுல பள்ளிக்கரணை காவல் மாவட்டம் வரது... இங்க இருக்கற சில பெண் போலீசார், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.எஸ்.ஐ., மீது உயர் அதிகாரிகளிடம் பாலியல் புகார் குடுத்தாங்க பா...
''இந்த புகார்கள் சம்பந்தமா, மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு பெண் உதவி கமிஷனர்
விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை அப்போதைய கமிஷனர் அமல்ராஜுக்கு அனுப்பினாங்க... ஆனா, இடையில இருந்த சிலர், அந்த அறிக்கை அமல்ராஜ் பார்வைக்கு போகாம தடுத்துட்டாங்க பா...
''இதனால, எஸ்.எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரின் ஆட்டம் இன்னும் அதிகமாகிடுச்சு... புதுசா வந்திருக்கிற கமிஷனராவது, அந்த அறிக்கையை பார்த்துட்டு, நடவடிக்கை எடுப்பாரான்னு பெண் போலீசார் காத்துட்டு இருக்காங்க பா...''
என முடித்தார், அன்வர்பாய்.
''சுக்கு காபி போடுங்க நாயரே...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.