/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பிரசாரமே செய்யாமல் பல லட்சம் 'ஸ்வாகா!'
/
பிரசாரமே செய்யாமல் பல லட்சம் 'ஸ்வாகா!'
PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

''ஆடு வளர்த்துட்டு இருக்காவ வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''இதெல்லாம் கிராமங்கள்ல சாதாரணமா நடக்கறது தான ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முழுசா கேளும்... சேலம் மாவட்டம், மல்லுார் போலீசார், நாழிக்கல்பட்டி பகுதியில், போன மாசம் ராத்திரி ரோந்து பணியில ஈடுபட்டாவ... அப்ப, ஒரு பைக்குல ரெண்டு ஆடுகளை துாக்கிட்டு வந்தவங்களை, மறிச்சாவ வே...
''அவங்க நிற்காம போகவே, துரத்துனாவ... போறப்பவே, பனமரத்துப்பட்டி போலீசாருக்கு, தகவல் குடுத்தாவ... பனமரத்துப் பட்டி போலீசாரும், பைக்கை பிடிக்க முயற்சி பண்ணாவ வே...
''பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ஆடுகளை துாக்கி வீசிட்டு, பைக்ல மர்ம நபர்கள் தப்பிச்சிட்டாவ... ரெண்டு பெண் ஆடுகளையும் பனமரத்துப்பட்டி போலீசார் மீட்டு, ஸ்டேஷன்ல வச்சு தீவனம், தண்ணீர் கொடுத்து வளர்க்காவ...
''ஆடுகளை தேடி யாரும் வராததால, என்ன பண்றதுன்னு தெரியாம போலீசார் முழியா முழிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கறிக்கடைக்கு விற்காம இருந்தா சரி தான் ஓய்...'' என சிரித்த குப்பண்ணா, ''அறங்காவலர் பதவியை பிடிக்க, தி.மு.க., புள்ளி படாதபாடு படறார் ஓய்...'' என்றார்.
''எந்த கோவில்ல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாவட்டம், பேரூரில் பட்டீஸ்வர சுவாமி கோவில் இருக்கோல்லியோ... இக்கோவிலின் அறங்காவலர் பதவிக்கு, உள்ளூர் கவுன்சிலர் கணவரும், தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளியுமான ஒருத்தர் விண்ணப்பிச்சு இருக்கார் ஓய்...
''விண்ணப்பத்தில் ஒரு பெயரை குறிப்பிட்டும், கையெழுத்தை வேறு பெயரிலும் போட்டிருக்கார்... இதனால, அறநிலையத் துறைக்கு சந்தேகம் வந்துடுத்து ஓய்...
''இவரை பத்தி, பேரூர் போலீசாரிடம் கேட்டிருக்கா... அதுல, அவர் மேல கிரிமினல் வழக்கு இருக்கறது தெரியவந்துது ஓய்...
''இதனால, அவரது பெயரை தகுதியற்றவர் வரிசையில வச்சுட்டா... ஆனாலும், அசராத, தி.மு.க., புள்ளி, 'அது பொய் வழக்கு'ன்னு சொல்லி, அறங்காவலர் பதவியை பிடிக்க முட்டி மோதறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முனியப்பன் இந்த பேப்பரை அங்க வைங்க...'' என, நண்பரை ஏவிய அந்தோணிசாமியே, ''மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறாங்க...'' என்றார்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மாவட்டங்கள்ல இருக்கிற, செய்தி - மக்கள் தொடர்பு துறை அலுவலகங்கள், கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டுல இருக்குதுங்க... இத்துறையில், அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரசார படக்காட்சி வாகனம் இருக்குதுங்க...
''இதுக்கு தனியா டிரைவர், உதவியாளர் உட்பட மூணு ஊழியர்கள் இருக்காங்க... இந்த வாகனங்கள், ராத்திரியில கிராமங்கள்ல முகாமிட்டு, அரசு திட்டங்கள் குறித்த விளம்பர படக்காட்சி களை ஒளிபரப்பணும்...
''ஆனா, இந்த வாகனங்கள், 90 சதவீதம் இயக்கப்படுறதே இல்லைங்க... இந்த பணியாளர்களும் வேலையே செய்யாம, மாசா மாசம் சுளையா சம்பளத்தை மட்டும் வாங்கிடுறாங்க...
''அதே நேரம், இந்த வாகனங்கள் கிராமங்களில் பிரசாரம் செஞ்சது போல மாதம் பல லட்சம் ரூபாய் கணக்கு எழுதுறாங்க... டீசல், வாகன பராமரிப்புன்னு பல வழிகள்லயும் செலவு எழுதி, பணத்தை துறையின் அதிகாரிகள் பங்கு போட்டுக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.