/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' டெண்டரே ' விடாமல் ரூ.22 கோடிக்கு பணி ஒதுக்கீடு!
/
' டெண்டரே ' விடாமல் ரூ.22 கோடிக்கு பணி ஒதுக்கீடு!
' டெண்டரே ' விடாமல் ரூ.22 கோடிக்கு பணி ஒதுக்கீடு!
' டெண்டரே ' விடாமல் ரூ.22 கோடிக்கு பணி ஒதுக்கீடு!
PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, “முதல்வர் கவனத்துக்கு போகாம தடுக்கிறாங்க பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“என்ன விஷயத்தை வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“தொழில் நகரமான திருப்பூரில், உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்னு, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறாங்க... ஆனா, திருப்பூர் மாநகராட்சி உட்பட மாவட்டம் முழுக்கவே ஊராட்சிகள், பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் இல்ல பா...
“குப்பை கொட்டுறதுக்கு இடமில்லாம தவிக்கிறாங்க... திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் சேரும், 700 டன் குப்பையை கொட்ட பாறைக்குழிகளை தேடி அலையுறாங்க... பாறைக்குழிகள்ல கொட்ட அப்பகுதி மக்களும், கம்யூ., கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க பா...
“இந்த விஷயத்தை, முதல்வரின் பார்வைக்கு கொண்டு போய் நடவடிக்கை எடுக்கலாம்னு அதிகாரிகள் நினைச்சாலும், ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் தடுக்கிறாங்க... 'பிரச்னையை நீங்களே சமாளிக்க பாருங்க'ன்னு அதிகாரி களுக்கு அறிவுரை தர்றாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரிக்க போறாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“அரியலுார் மாவட்ட நகர ஊரமைப்பு துறையின் உயர் அதிகாரி ஒருத்தரும், அவருக்கு கீழே இருக்கும் இன்னும் இரண்டு அதிகாரிகளும் சேர்ந்து, துறையின் மேலிடத்துக்கு மாதாந்திர மாமூல் தரணும்னு, 'லே அவுட்' வரைபட அங்கீகாரத்துக்கு தலா, 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்றாங்க...
“இது சம்பந்தமா, அரியலுார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருந்தாங்க... புகார் குறித்து விசாரிச்சு நடவடிக்கை எடுத்து, அறிக்கை அனுப்பி வைக்கும்படி, மாவட்ட நகர ஊரமைப்பு துறை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு தனிப்பிரிவு அலுவலகம் உத்தரவு போட்டுச்சுங்க...
“இது சம்பந்தமான விசாரணைக்கு வரும்படி, துணை இயக்குநர் அலுவலக அதிகாரியிடம் இருந்து இன்ஜினியர்ஸ் அசோசியேஷனுக்கு கடிதம் போயிருக்கு... இதுல என்ன வேடிக்கைன்னா, யார் மேல புகார் குடுத்தாங்களோ, அவர் தான் விசாரிக்க போறாராம்... இதனால, புகார் குடுத்தவங்க அதிர்ச்சியில இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“ஸ்ரீதர், தள்ளி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, ''செய்தித்துறை பற்றி ஒரு தகவல் கேள்விப்பட்டீரா ஓய்...'' என்றார்.
''என்ன, அரசு திட்டங்களைச் சொல்ல, வேறு நாலு பேரை நியமிச்சிட்டாங்களேன்னு, வருத்தப்படுறாங்களா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''அந்த விவகாரம் இல்லே இது... விளம்பரங்கள் வெளியிடுற விவகாரம்...
' 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சம் பந்தமா, விளம்பரப் பலகை கள் வைக்க முடிவு செஞ்சிருக்கா... அதுக்கு டெண்டர் வெளியிடணுமோல்லியோ... அதைச் செய்யாம, பஸ் ஸ்டாண்ட், சென்னையில மெட்ரோ பில்லர்கள்ல பெரிய பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கவும், சமூக வலைதளங்கள்ல விளம்பரம் வெளியிடவும் ஏற்பாடு ஆயிண்டுருக்கு... 22 கோடி ரூபாய்க்கு ரெண்டே ரெண்டு விளம்பர ஏஜென்சிகளுக்கு வேலையை ஒதுக்கி இருக்கா... விளம்பரத்துக்கான கமிஷன் தொகை வெறும், 7.5 சதவீதம்தான்னாலும், இது, 'அட்ராசிட்டி' தானே ஓய் ...
''செய்தித்துறை எப்பவுமே ஆட்சியாளர் களின் செல்லப்பிள்ளை... அதனால, இங்க நடக்கற எந்த உள்ளடி வேலைகளும் ஆட்சியாளர்கள் பார்வைக்கே போறதில்ல... ஆட்சி மாறி, விசாரணை கமிஷன் போட்டா, நிறைய விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.