PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

''ப திவு துறையில் பதவி உயர்வு கொடுக்க பேரம் பேசறா ஓய்...'' என, பெஞ்ச் விவாதத்தைத் துவக்கினார் குப்பண்ணா.
''பணம் கொட்டுற துறையாச்சே பா... 'வெயிட்'டா வாங்குவாங்களே...'' என்றார் அன்வர்பாய்.
''கேளும்... பதிவுத் துறையில், 30 உதவி ஐ.ஜி., இடங்களுக்கு, மாவட்ட பதிவாளர்களை, 'புரமோஷன்'ல நியமிக்க முடிவு பண்ணியிருக்கா... இதில், துறை மேலிடம் சார்புல, சம்பந்தப்பட்டவாகிட்டே சிலர் பேரம் பேசினா... தகுதி அடிப்படையில் புரமோஷன் வரும் போது, எங்கே, 'போஸ்டிங்' போட்டாலும் பரவாயில்லைன்னு, அவா பிடி கொடுக்கல... இதனால, சொத்தையான புகார்களை குறிப்பிட்டு, கடைசி, 10 பேரை பட்டியலில் இருந்து எடுத்துட்டு, 'கவனிப்பு' செஞ்ச, 10 பேருக்கு வாய்ப்பு கொடுத்துட்டா ஓய்...
''இப்ப காலியா உள்ள மாவட்ட பதிவாளர் இடங்களுக்கு, சார் பதிவாளர்களை புரமோஷன்ல போடறதுக்கு பேரத்தை துவங்கிட்டா... சார் பதிவாளர்கள், உதவியாளர்கள்னு, 200 பேரிடம் தலா, 50 லட்சம் ரூபா வசூல் பண்ணனும்னு 'டார்கெட்' வேற கொடுத்திருக்கா... பொறுப்பாளர் போட்டு வசூல் நடக்கறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எங்கிட்டேயும் சில்லரைத்தனமான ஒரு வசூல் மேட்டர் இருக்கு வே...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''அது என்னங்க வசூலில் சில்லரை... விஷயத்தை சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு பொறுப்பான அதிகாரி, பள்ளிகளுக்கு ஆய்வுக்கு போறாரு வே... அப்படி போற இடத்துல அவருக்கு, சாப்பாடு ஏற்பாடு செய்யணுமாம்... இல்லைன்னா மதிய சாப்பாட்டுக்கு பணம் கேக்காரு... கமிஷனரிடமே, அந்த அதிகாரியை பத்தி ஆசிரியர்கள் புகார் வாசிச்சிட்டாவ வே...
''மாநகராட்சி கல்வித் துறை தான் இந்த லட்சணம்னா, மாவட்ட கல்வி துறைக்கு பொறுப்பான அதிகாரியும், ஆய்வுக்கு போற ஸ்கூல்கள்ல, ஆசிரியர்களிடம் வசூல் வேலையை கரெக்டா செய்யுறதா பேசிக்காவ வே...'' என, விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் அண்ணாச்சி.
''சொல்லுங்க தாம்சன்... என்னது, ரவிச்சந்திரனும் வர்றாரா... வரச் சொல்லுங்க... டீ குடிச்சிட்டு போகலாம்...'' என, போன் இணைப்பை துண்டித்த அந்தோணிசாமி, கடைசி தகவலுக்குத் தாவினார்...
''ஓரம் கட்டிய உறவினரை, தேர்தல் செலவுக்காக, அந்த அமைச்சர் ஒண்ணா சேர்த்துக்கிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியிடம், ''யாரு பா அது...'' எனக் கேட்டுச் சிரித்தார் அன்வர்பாய்.
''தென்மாவட்ட அமைச்சர் ஒருவருடன், அவரது நெருங்கிய உறவினர், நிழல் போல சுற்றி வந்தாரு... அமைச்சருக்கும், அந்த நிழல் பிரமுகருக்கும் சமீபத்தில் முட்டிக்கிச்சு... 'என் முகத்தில் முழிக்கக் கூடாது'ன்னு சொல்லி, நிழல் பிரமுகரை அமைச்சர் விரட்டிட்டார்... அமைச்சரை நெருங்க முடியாமல் இருந்த கட்சி நிர்வாகிகள், இந்த சம்பவத்தைப் பார்த்து கொஞ்சம் சந்தோஷப்பட்டாங்க...
''ஆனா, அந்த சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கல... ரெண்டு பேரும் இப்ப ராசியாகி, ஒரே கார்ல ஒண்ணா வலம் வர்றாங்க... அமைச்சரின் பெயரை கூறி பல இடங்களில் நிழல் புள்ளி வாங்கி குவித்த தொகையை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தணும்னு சம்மதிக்க வச்சி, அவரோட ராசியானதா கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அனிதா அண்ணாச்சி விபரமான ஆளாச்சே... நம்ம சங்கரின் சேட்டைகள் எல்லாம் அவர்கிட்ட பலிக்குமா என்ன...'' என, அன்வர்பாய், 'கமென்ட்' அடிக்க, சிரித்தபடியே நண்பர்கள் கலைந்தனர்.

