/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
/
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

மனிதர்களுக்கு ஓயாத தொல்லை தருபவை கொசுக்கள். வந்தோம், கடித்தோம், வயிராற ரத்தம் குடித்தோம் என்றில்லாமல், விஷ வைரஸ்களைப் பரப்பும் விஷமம் பிடித்தவை இவை. இதனால் தான் இவற்றிடம் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர்.
மேட் முதல் கொசு அடிக்கும் பேட் வரை, வேப்பிலை முதல் கொசு வலை வரை என்ன செய்தாலும் இவற்றை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. எங்காவது ஒளிந்திருந்து தங்கள் வேலையைக் காட்டிவிடும்.
இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்தக் கொசுக்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. கருவிக்கு 'ஐரிஸ்' என்று பெயர் சூட்டியுள்ளது. இதை ஓர் அறைக்குள் வைத்துவிட்டால் போதும். சதாநேரமும் கேமரா கண்கொண்டு கொசுக்களைத் தேடிக் கொண்டே இருக்கும். அகச்சிவப்பு எல்.இ.டி., விளக்கும் இதில் இருப்பதால் இருளிலும் கண்காணிக்கும். இதில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூளையாகச் செயல்படுகிறது. இதனால் கொசுக்களுக்கும், இன்ன பிற காற்றில் மிதக்கும் குப்பைக்கும் எளிதாக வித்தியாசம் கண்டுவிடும்.
பறக்கும் கொசு எங்காவது அமர்ந்துவிட்டால் உடனே இந்தக் கருவி தன் லேசர் வெளிச்சத்தால் அந்த இடத்தைக் காட்டிவிடும். கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை வந்துவிடும். பிறகு பேட்டை எடுத்து கொசுவை வேட்டையாட வேண்டியது உங்கள் வேலை.
அதையும் அந்த மிஷினே செய்து விடக் கூடாதா என்று நீங்கள் நினைப்பது அந்த நிறுவனத்திற்கு கேட்டிருக்கும். விரைவில் இதற்கும் வழியுடன் வரும் என்று எதிர்பார்ப்போம்.