/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
மண்ணுக்கு உரமாகும் கண்ணாடித் துகள்கள்
/
மண்ணுக்கு உரமாகும் கண்ணாடித் துகள்கள்
PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

கண்ணாடிப் பொருட்கள் வீணாகும்போது அவற்றில் பெரிய துண்டுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய துண்டுகள் பெரும்பாலும் மண்ணில் தான் புதைக்கப்படுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல்கலை விஞ்ஞானிகள், இந்தக் கண்ணாடித் துகள்களை மண்ணில் கலப்பது பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
மண், கண்ணாடி இரண்டுமே சிலிக்காவால் ஆனவை என்பதை மனதில் கொண்டே விஞ்ஞானிகள் ஆய்வைத் தொடங்கினர். கண்ணாடி மறுசுழற்சி செய்யும் இடத்தில் இருந்து கண்ணாடித் துகள்களை வாங்கினர். அவற்றின் கூர்மையான முனைகளை மழுங்கடித்தனர்.
செடிகள் வளர்ப்பதற்கு பயன்படும் மண்ணில் துகள்களை வெவ்வேறு விகிதங்களில் கலந்து தொட்டிகளில் நிரப்பினர். பின்பு அவற்றில் கொத்தமல்லி, குடைமிளகாய், மிளகாய் ஆகிய தாவரங்களை நட்டு வளர்த்தனர்.
முழுக்கவே மண் மட்டும் நிரம்பிய தொட்டியை விட 50 சதவீதம் மண், 50 சதவீதம் கண்ணாடித் துகள்கள் கலந்த தொட்டியில் செடிகள் வேகமாக வளர்ந்தன.
வெறும் மண்ணில் உருவான சில பூஞ்சைகள் தாவரத்தின் வளர்ச்சியைத் தடுத்தன. ஆனால், கண்ணாடி கலந்த மண்ணில் பூஞ்சைகள் உருவாகவில்லை.
இதனால் தான் அவற்றில் தாவரங்கள் வேகமாக, நன்றாக வளர்ந்துள்ளன. ஆகவே, இனி எதிர்காலத்தில் இவ்வாறு வீணாகும் கண்ணாடித் துகள்களைக் கொண்டு பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தப் புது முயற்சியால் பயிர்களுக்கான உரம், ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

