PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

பொது இடங்களில் போடப்படும் குப்பை கழிவுகளை அகற்றுவது பெரிய வேலையாக உள்ளது. ஏராளமான துாய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் முழு தீர்வு கிடைப்பதில்லை. இதனால், இதற்கென்றே பிரத்யேக ரோபோ ஒன்றை, 'யுனிட்ரி' எனும் சீன நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இத்தாலிய தொழில்நுட்ப கழகம் இந்த ரோபோவை, சிகரெட் குப்பையை அகற்ற பயன்படுத்தி உள்ளது. பயன்படுத்தப்பட்ட சிகரெட்கள் தான் பொது இடங்களில் மிக அதிகளவில் சேரும் குப்பை.
எனவே, அதை கண்டுபிடிக்கும் பிரத்யேக கேமராவும், கண்டுபிடித்த பின் அதை உறிஞ்சிக் கொள்ளும் 'வாக்குவம் கிளீனரும்' இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன.
எனவே, இதற்கு வெரோ (VERO - Vacuum -cleaner Equipped Robot), அதாவது வெற்றிட அழுத்தம் கொண்டு சுத்தம் செய்யும் கருவி பொருத்தப்பட்ட ரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, நான்கு கால்களுடன் பார்ப்பதற்கு இயந்திர நாய் போல் இருக்கும். கால்களுக்கு அருகில் தான் உறிஞ்சு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றின் வாயிலாக சிகரெட் குப்பை இருக்கும் இடத்தை கண்டறிந்து, இயந்திரக் கால்களால் அங்கு நடந்து செல்கிறது; கால்களை குப்பை மீது வைத்து உறிஞ்சிக் கொள்கிறது. எதிர்காலத்தில் இதில் இன்னும் அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.