PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

வீட்டில் தனியாக இருக்கும்போது, குளிக்கும்போது நாம் பாடுவோம் அல்லவா? அதுபோல் ஒரு டால்பின் தனிமையில் பாடுவதை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். டால்பின்கள் புத்திசாலித்தனம் நிறைந்தவை; மனிதர்களுடன் இணக்கம் காட்டுபவை. இவை, பல மைல் தொலைவில் இருந்தும்கூட தங்களுக்குள் வித்தியாசமான ஒலிகளின் வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளும்.
கடந்த 2007ம் ஆண்டு பிறந்து, தன் குழுவிலிருந்து பிரிந்து ஒரு டால்பின் டென்மார்க் கடற்கரை வந்து சேர்ந்தது. மக்களை பார்த்ததும் குஷியாகி குதித்து விளையாடி, ஒலி எழுப்பும் இந்த டால்பினுக்கு 'டெல்லெ' என்று பெயரிடப்பட்டது. இதனால், வித்தியாசமான ஒலிகளால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்தனர். இதன் குரலை பதிவு செய்ததில் இது, 10,833 வித்தியாசமான ஒலிகளை எழுப்புவது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு வேறுபட்ட ஒலிகளை உருவாக்குவதற்கான காரணம் இது தான் என்று விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. ஆனால், சில அனுமானங்களை செய்துள்ளனர்.
இந் த டால்பின் தன் குழுவில் இருந்து 500 மைல் துாரம் பிரிந்து வந்துவிட்டதால், தன் குழுவிடம் சேர எண்ணி ஒலி சமிக்ஞையை அனுப்பலாம். அப்படி இல்லை என்றால், தன் தனிமையை போக்கிக் கொள்ள தன் குழுவினர் பெயரை பாட்டாக பாடிக் கொண்டிருக்கலாம்.
இந்த டால்பினுக்கு 'ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி' இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மேற்கொண்டு ஆய்வு செய்தால், அது சொல்ல வருவதை புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.