PUBLISHED ON : அக் 12, 2023 12:00 AM

நம்மைப் போல, விலங்குகளும் தங்களுடைய சூழலுக்கு ஏற்ப விளையாடுகின்றன. இந்த விளையாட்டுகள் அவற்றுக்கு நன்மை செய்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் கிரபின் பல்கலை விஞ்ஞானிகள், சுறா மீன்கள், கடல்பாசிகளை வைத்து விளையாடுவதன் காரணத்தைக் கண்டறிந்துள்ளனர்.
163 சுறாக்கள் விளையாடுவதை, ட்ரோன் கேமிராவை வைத்து, படம் எடுத்துள்ளனர். பாசியைத் தங்கள் உடல் முழுதும் படும் படி சுறாக்கள் விளையாடுகின்றன. சுறாக்கள் நீண்ட காலம் வாழக்கூடியவை. அவற்றின் உடலில் ஏராளமான நோய்க்கிருமிகள் இருக்கும்.
கடல்பாசிகளைக் கொண்டு இவை தங்களுடைய உடலில் உள்ள நச்சுக்கிருமிகள், இறந்த தோல் ஆகியவற்றை நீக்கிக் கொள்கின்றன. குறிப்பாக நீண்ட துாரம் வலசை செல்லும் சுறாக்கள் அடிக்கடி இவ்வாறு செய்கின்றன.
இப்படி விளையாடும் சுறாக்களில் 14 சதவீதம் மட்டுமே மிக இளையவை. பருவ வயது சுறாக்களே பெரும்பாலும் இவ்வாறு விளையாடுகின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடல்பாசிகளில் இருந்து தோல் சுருக்கத்தை சரி செய்யும் அழகு சாதன பொருட்களை உருவாக்க முடியும் என்று சமீபத்தில் தான் கண்டறியப்பட்டது.
ஆனால் சுறாக்கள் இயற்கையாகவே தங்கள் ஆரோக்கியத்திற்கு அவற்றை பயன்படுத்துகின்றன என்பது இயற்கையில் காணப் படுகின்ற ஆச்சரியமான விஷயமாகும்.
