PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

நம் பூமியை ஒரு விண்கல் தாக்கியதால் இங்கிருந்த டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்தன என்பதை அறிவோம். ஆனால், இந்த விண்கல்லை விடப் பல மடங்கு பெரிய விண்கல் ஒன்று கேனிமீட் நிலவைத் தாக்கியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நம் சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் வியாழன். அதனுடைய மிகப் பெரிய நிலவு கேனிமீட். இதுவே ஒட்டுமொத்த சூரியக் குடும்ப நிலவுகளில் பெரியது. 1610ஆம் ஆண்டு கலீலியோவால் கண்டுபிடிக்கப்பட்ட இது, புதன் கோளை விடப் பெரியது.
அமெரிக்கா அனுப்பிய பயனியர் 10 செயற்கைக்கோள் 1973ஆம் ஆண்டு டிசம்பரில் இதன் அருகே சென்றது. இதற்குப் பிறகு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களும் நடத்தப்பட்ட ஆய்வுகளும் இந்த நிலவைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. சூரியக் குடும்பத்திலேயே காந்தப் புலனை உடைய ஒரே நிலவான இது, பனியால் மூடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலவில் மிகப் பெரிய வட்ட வடிவப் பாளங்கள் காணப்படுகின்றன. இவை எப்படி ஏற்பட்டன என்பது குறித்து ஆராய்ந்தனர் விஞ்ஞானிகள். 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய விண்கல் ஒன்று மோதியதால் இப்படியானது என்கின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த கோபே பல்கலை விஞ்ஞானி ஒருவர், இந்தக் கோளின் வட பகுதியில் இடித்த விண்கல் தென் பகுதி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். இது குறித்து மேலும் ஆராய்ந்தபோது இந்த நிலவைத் தாக்கிய விண்கல் 300 கி.மீ. விட்டமுடையது என்று தெரியவந்துள்ளது. இது நம் பூமியைத் தாக்கிய விண்கல்லை விட 20 மடங்கு பெரியது.