PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM

தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள மோகம் என்றும் குறைவதில்லை. பெரும்பாலும் ஆபரணங்களுக்காகவே பயன்பட்டு வந்த தங்கம் இந்த நுாற்றாண்டில் பல்வேறு துறைகளிலும் நுழைந்தது. மின் சாதனங்கள், மருத்துவம், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றில், பல வகைகளில் தங்கம் பயன்படுகிறது.
தங்கம் ஒரு புதுப்பிக்க இயலாத ஆற்றல். அதாவது, இதைத் தொடர்ந்து பெறுவது என்பது இயலாது. என்றாலும், இதற்கான தேவை அதிகரித்தபடி தான் உள்ளது. மின் சாதனங்களில் தங்கம் பல்வேறு வகைகளில் உபயோகிக்கப்படுகிறது. பயன்படுத்தித் துாக்கி எறியப்படும் மின் சாதனங்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது நம் தங்க தேவையை ஓரளவு ஈடுசெய்யும்.
இருந்தாலும் இவ்வாறு பிரித்தெடுப்பது சுலபமல்ல. செயலுாக்கப்பட்ட கரிமத்தைப் (Activated carbon) பயன்படுத்திப் பிரித் தெடுப்பதற்கு அதிகமான ஆற்றல் தேவை. எனவே, அதிக ஆற்றல் தேவைப்படாத, குறைந்த செலவில் பிரிக்கும் முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
தற்போது சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஈ.டி.எச்., சூரிச் பல்கலை ஓர் எளிய முறையைக் கண்டுபிடித்துள்ளது. பொதுவாக, பால் பொருள் தொழிற்சாலைகளில் பாலாடைக் கட்டிகளை உற்பத்தி செய்வதற்காகப் பாலைத் திரிய விடுவர். அப்போது தயிர் ஒருபுறம் திரண்டு வரும். மறுபுறம் வே (Whey) எனும் நீர் பிரியும்.
இதிலிருந்து புரத நார்களை உருவாக்குவார்கள். இந்த நார்களை அதிக வெப்பநிலையில், அமிலத்தில் வைத்தால் புரதச் சத்துக்கள் இளகி நானோ நார்களாகிவிடும். இவற்றைக் காயவைத்து பஞ்சுகளாக்கி விடுவர். இந்தப் புரதப் பஞ்சுளைக் கொண்டு தங்கத்தைப் பிரித்தெடுக்க முடியும்.
விஞ்ஞானிகள், 20 பழைய கணினிகளில் இருந்து மதர்போர்டுகளை எடுத்து அவற்றை அமிலத்தில் ஆழ்த்தினர். உடன் புரதப் பஞ்சுளையும் வைத்தனர். மதர்போர்டுகளிலிருந்த தங்கம், இரும்பு, தாமிரம், நிக்கல் ஆகியவை அமிலத்தில் கரைந்து பஞ்சுகளில் படிந்தன.
கரைசலில் இருந்து பஞ்சை வெளியே எடுத்து, தங்கத்தைப் பிரித்தனர். முடிவில், 500 கிராம் தங்கக் கலவை கட்டி கிடைத்தது. இதில், 90.8 சதவீதம் தங்கமும், 10.9 சதவீதம் தாமிரமும், 0.018 சதவீதம் நிக்கலும் இருந்தன. இதில், 22 காரட் சுத்தமான தங்கம் கிடைத்தது.
செயலுாக்கப்பட்ட கரிமத்தைப் (Activated carbon) பயன்படுத்தி, 1 கிராம் தங்கத்தைப் பிரித்தெடுக்கும்போது, 116 கிராம் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.
ஆனால், புரதப் பஞ்சுளைக் கொண்டு அதே அளவு தங்கத்தை பிரித்தெடுக்கும் போது, 87 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால், முன்னதைக் காட்டிலும் இந்த முறையானது சுற்றுச்சூழலுக்குக் குறைவான கேடு தருகிறது.
விலங்குப் பாலில் இருந்து கிடைக்கும் வே புரதத்தை விட பட்டாணி, உருளை முதலிய தாவரங்களிலிருந்து எடுக்கும் புரதங்கள் சுற்றுச்சூழலுக்குக் குறைவான தீங்கு விளைவிப்பவை.
ஆகவே, இவற்றைக் கொண்டு தங்கம் எடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இது வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

