/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
வைரசையும் வடிகட்டும் எளிய வடிகட்டி
/
வைரசையும் வடிகட்டும் எளிய வடிகட்டி
PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

மாசுபட்ட தண்ணீரைச் சுத்திகரிக்க பல நவீன முறைகள் வந்துவிட்டன. எல்லாவற்றிலும் பெரும்பாலும் அதிக விலை மதிப்புள்ள வடிகட்டிகளே பயன்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குறைந்த விலையில் நவீன வடிகட்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மிகச் சாதாரணமான பொருட்கள் கொண்டு, எளிமையாக இதை வடிவமைத்துள்ளனர்.
அசுத்தமான தண்ணீரை ஆறு, குளம் அல்லது ஏதேனும் நீர் நிலையிலிருந்து எடுத்து 1.5 லிட்டர் கொள்ளளவு உள்ள குழாய்க்குள் செலுத்தினர். குழாயிலிருந்து மெல்ல மெல்ல 'ஹைட்ரோஜெல்' வடிகட்டி வழியாகத் தண்ணீரை அனுப்பினர். இந்த 'ஹைட்ரோஜெல்' எண்ணற்ற நுண் ஓட்டைகள் உள்ள நானோ நார்களால் ஆனது. ஒவ்வோர் ஓட்டையும் 10 நானோ மீட்டர் விட்டம் கொண்டவை. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை இந்த அளவை விடப் பெரியவை என்பதால் இந்த வடிகட்டிகளில் மாட்டிக் கொள்ளும். வடிகட்டப்பட்ட தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வடிகட்டியை 30 முறை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பது தான். பயன்படுத்திய பின் துாக்கி எறிந்தாலும் மண்ணில் மக்கிவிடும். வடிகட்டிக்குத் தேவையான செல்லுலோஸ் இயற்கையில் மிகவும் அபரிமிதமாகக் கிடைக்கின்ற ஒரு பொருள். இதைத் தாவரங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளலாம். இதைப் பெரியளவில் வடிவமைக்க ஆய்வாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். இது பயன்பாட்டிற்கு வந்தால் கிராமப்புற, சிறு நகர மக்கள் மிகுந்த பயன் அடைவர்.