PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

இயற்கை எல்லா உயிர்களுக்கும் தனித்த திறன்களைத் தந்துள்ளது. அவற்றை வைத்து அவை தங்கள் உணவு, பாதுகாப்பு, இனப்பெருக்கம் ஆகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. பூச்சிகளில் சிலந்திகள் மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவற்றின் அறிவாற்றல் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அறியப்படாத சிலந்தியின் ஆற்றலைக் கண்டறிந்துள்ளனர்.
சின்ஹுயா பு எனும் ஆய்வாளர் சிலந்திகளின் வலையில் சிக்கும் மின்மினிப் பூச்சிகளை ஆராய்ந்தபோது, அவை பெரும்பாலும் ஆண் பூச்சிகளாகவே இருப்பது தெரியவந்தது. பொதுவாக மின்மினிப்பூச்சிகளில் பெண், ஆண் பூச்சிகள் வெவ்வேறு விதமாக ஒளிரும். ஆண் பூச்சி இனப்பெருக்கம் செய்வதற்கான சமிக்ஞையாக சிலவிதமான ஒளிகளை உருவாக்கும். பெண் பூச்சி பதில் சமிக்ஞையை ஒருவிதமான ஒளி மூலம் காட்டும். இதைப் பார்த்த பின் ஆண் பூச்சி, பெண் பூச்சியை நோக்கி வரும். இதை எப்படியோ உணர்ந்த சிலந்திகள் தங்கள் தந்திரோபாயத்தைப் பயன்படுத்துகின்றன.
வைரஸ் கொண்டு கணினியை ஹாக் செய்வதுபோல தன் வலையில் சிக்கும் ஒரே ஓர் ஆண் பூச்சியைக் கடித்து, அதைப் பெண் பூச்சி போல் ஒளிரச் செய்கிறது தந்திரக்கார சிலந்தி. இதைக் காணும் ஆண் பூச்சி, பெண் பூச்சி தான் தங்களுக்குச் சமிக்ஞை தருகிறது என்று எண்ணி சிலந்தி வலையில் பரிதாபமாகச் சிக்கிக் கொள்கின்றன.
பிறகு என்ன? மின்னுவதெல்லம் பெண் என்று எண்ணி வந்த அந்த அப்பாவி ஆண் பூச்சிகளைச் சிலந்தி தன் ஆகாரம் ஆக்கிவிடும். சிலந்தி எப்படி ஆண் பூச்சியை பெண்போல் ஒளிரச் செய்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.