/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
தாமிர 'காயில்' இல்லாத அசத்தல் மின் மோட்டார்!
/
தாமிர 'காயில்' இல்லாத அசத்தல் மின் மோட்டார்!
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

உலோகத்தையே பயன்படுத்தாமல் ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் தென் கொரியாவின், கே.ஐ.எஸ்.டி., நிலைய விஞ்ஞானிகள்.
மோட்டார் காயிலுக்கு, கனமான தாமிரம் அல்லது அலுமினிய கம்பிச் சுருள்களுக்குப் பதிலாக, கார்பன் நானோகுழாய்களைக் (Carbon Nanotubes) கொண்டு உருவாக்கப்பட்ட கம்பிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்திஉள்ளனர்.
இவை மிகவும் இலகுவானவை. உறுதியானவை. அதோடு வளையும் தன்மை கொண்டவை. இந்த நானோகுழாய் கம்பிகள், தாமிரக் கம்பிகளைவிட 80 சதவீதம் வரை எடை குறைந்தவை. குறைவான எடை இருப்பது, மின்சார வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். உதாரணமாக, ஒரு விமானத்தில், கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கிய மோட்டார்களை பயன்படுத்தினால் பல நூறு கிலோ எடையை குறைக்க முடியும்.
தற்போதைக்கு கார்பன் நானோகுழாய் காயில்களின் மின் கடத்தும் திறன் தாமிரத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. எனினும், எடை குறைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை, இதை ஒரு சிறந்த மாற்றாக முன்னிறுத்துகின்றன.
உலோக காயில் இல்லாத மோட்டார்கள், இலகுரக மின்சாரவாகனங்களுக்கு விரைவில் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.