PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மிகவும் வலி தருபவை. அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் உணர்வு எப்போதும் இருத்தல் ஆகியவை இதன் விளைவுகள். இதனால் ஆண்களை விடப் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இந்த நோய், 80 -- 85 சதவீதம் எஸ்செரிசியா கோலை எனும் பாக்டீரியாவால் தான் ஏற்படுகிறது.
தற்போதுள்ள சூழலில் இந்த நோய்க்குச் சிகிச்சை செய்ய கிருமிகளைக் கொல்லும் ஆன்டிபயாடிக் மருந்துகளே பயன்பாட்டில் உள்ளன.
என்னதான் வலுவான ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை கிருமிகள் மிக விரைவில் வளர்த்துக் கொள்கின்றன. இது தவிர தொடர்ந்து இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இதற்கு மாற்று கண்டறிய ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான் இந்த நோய் வராமல் இருக்க Uromune MV140 எனும் தடுப்பு மருந்தை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எஸ்செரிசியா கோலை உள்ளிட்ட நான்கு வகை பாக்டீரியா செயலற்ற நிலையில் இந்த மருந்தில் இருக்கும். இதை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
மாறாக நாக்கிற்கு அடியில் ஸ்பிரே வடிவில் அடித்துக் கொண்டால் போதும். அன்னாசிப் பழ ப்ளேவரில் உள்ள இந்த மருந்தை மூன்று மாதங்கள் தினமும் பயன்படுத்தினால், 9 ஆண்டுகள் வரை சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படாது.
தற்போது இந்த மருந்து ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 26 நாடுகளில் கிடைக்கிறது. விரைவில் உலகம் முழுதும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

