PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

பருவ வயதில் பருக்கள் தோன்றுவது இயற்கை தான். ஆனால், அவை தொடர்ந்து தோன்றினால் தொல்லை தான். சருமத்தின் அழகைக் கெடுத்துவிடும். இவை தோன்றாமல் கட்டுப்படுத்த சில பாக்டீரியாவைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சருமத்தின் முடி வளரும் துளைகள், எண்ணெய், இறந்த தோல் செல்கள் ஆகியவற்றால் மூடப்படும்போது வீக்கம் ஏற்பட்டு பருக்கள் உருவாகின்றன. இவ்வாறு பருக்கள் தோன்றாமல் இருக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் செல்களை அழித்தல் உள்ளிட்ட பல வழிகள் உள்ளன.
பருக்கள் தோன்றக் காரணமாக இருப்பது 'சீபம்' என்னும் ஒரு வகை எண்ணெய் தான். பருக்களுக்கான மருந்துகளில் இந்த எண்ணெயை உற்பத்தி செய்யும் செல்களை அழிக்கின்ற 'ஐசோட்ரீடினாயின்' என்ற ரசாயனம் இருக்கும்.
இயற்கையாகத் தோலில் இருக்கும் 'ஐசோட்ரீடினாயினின்' உற்பத்தியை அதிகப்படுத்த என்.ஜி.ஏ.எல். (NGAL) என்ற ஒருவகைப் புரதம் உதவும். இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யும் வகையில் நம் சருமத்தின் தோலில் வாழ்கின்ற 'க்யூடிபாக்டீரியம் ஆக்னஸ்' எனும் பாக்டீரியாவை மரபணு மாற்றம் செய்துள்ளனர் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த யுபிஎஃப் (UPF) பல்கலை விஞ்ஞானிகள்.
இந்த பாக்டீரியாவைச் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மனிதத் தோல் செல்கள் மீது பரிசோதித்துப் பார்த்ததில் வெற்றி கிடைத்தது. இந்தச் சிகிச்சை முறை, பக்கவிளைவு ஏற்படுத்தும் செயற்கையான ரசாயனங்களுக்கு மாற்றாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

