PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

அன்டார்டிகா, பனி மூடிய கண்டம். மற்ற கண்டங்களில் இருந்து தனியாகப் பிரிந்து, தென் துருவத்தில் இருக்கிறது. இங்கு பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று பூமியின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவியிருக்கிறது. அன்டார்டிகாவில் சில பனிக்கட்டிகளில் வித்தியாசமான குமிழ்களை ஆய்வாளர்கள் கண்டனர்.
கிட்டத்தட்ட, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்தப் பனிக்கட்டிகளை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரிகன் பல்கலை ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்தனர். மீத்தேன் வாயு குமிழ்களாக உறைந்திருப்பது தெரிந்தது.
நம் பூமியில், 10,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. பூமியின் பெரும்பாலான பகுதிகள் பனியால் சூழப்பட்டு இருந்தன. பின் ஏற்பட்ட பருவ கால மாற்றத்தினால் பூமியில் வெப்பம் அதிகரித்தது. பனி உருகி நிலப்பகுதிகள் வெளிப்பட்டன. இவ்வாறு நிகழ்ந்த காலகட்டம் பனிக்காலம் (ஐஸ் ஏஜ்) என்ற அழைக்கப்படுகிறது. இதே காலத்தில் தான் மீத்தேனும் உறைந்துள்ளது.
பனிக்காலத்தின்போது பூமியின் வெப்பநிலை அதிகரித்ததால் அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டிருக்கக் கூடும். இதில் அதிகளவு மீத்தேன் வெளியானது.
இதுவே பூமியின் வளிமண்டலத்தில் திடீரென்று மீத்தேனின் அளவு அதிகரிக்கக் காரணம். இந்த மீத்தேன் தான் குமிழ்களாகி உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

