/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
புற்றுநோய்க்கு உதவுமா புது மருந்து?
/
புற்றுநோய்க்கு உதவுமா புது மருந்து?
PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

நீண்டகால மருத்துவம் தேவைப்படும் நோய்களில் ஒன்று புற்றுநோய். கல்லீரல் புற்றுநோய் மிகக் கொடிய நோய் வகையாகும். புற்றுநோய் மரணங்களில் மூன்றாவது அதிகமான மரணங்கள் எச்.சி.சி., (HCC) எனும் ஒருவகை கல்லீரல் புற்றுநோயால் ஏற்படுபவை தான்.
இதற்கான சிகிச்சை எளிமையானதன்று. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வுசெய்து வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் யுசி டேவிஸ் ஹெல்த் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 102 ஆண்டுகள் பழமையான பி.சி.ஜி., எனும் காசநோய்க்கான தடுப்பு மருந்தை, இந்த நோய்க்குப் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே இதைச் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
காசநோய்க்கான தடுப்பு மருந்தை, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எலிகளுக்குக் கொடுத்தார்கள். இந்த மருந்து புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்தது. அத்துடன் விஞ்ஞானிகள் ஆச்சரியப்படும்படி நோய் எதிர்ப்பாற்றல் மிக்க செல்களின் வளர்ச்சியைத் துாண்டியது.
குறிப்பாகப் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் டி செல்கள், மேக்ரோபேஜ்கள் ஆகியவை புற்றுநோய்க் கட்டிகள் நோக்கிப் பயணம் செய்ய உதவின. இதன் வாயிலாக, புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு கட்டிகள் சுருங்கத் துவங்கின. எலிகளின் மீதான சோதனை வெற்றி பெற்றுள்ளதால், மனிதர்களுக்கும் இது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வேறு வகையான நோய்களுக்கும் இந்த மருந்து உதவுமா, என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

