/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கரும்பிலிருந்து கட்டுமானப் பொருள்
/
கரும்பிலிருந்து கட்டுமானப் பொருள்
PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

சாறு பிழியப்பட்ட கரும்புச் சக்கை பெரும்பாலும் எந்தப் பயனும் இன்றி மண்ணில் புதைக்கப்படுகிறது. இந்தச் சக்கையைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தலாம் என்று கிழக்கு லண்டன் பல்கலை கண்டறிந்துள்ளது.
கருப்புச் சக்கையைச் சிலவிதமான ஒட்டும் பொருட்களுடன் சேர்த்து, அழுத்தம் கொடுத்துக் காய வைத்து, விரும்பிய வடிவங்களில் கட்டிகளாக உருவாக்க முடியும். அவற்றைச் செங்கற்கள், கான்கிரீட் கற்களுக்கு மாற்றாகக் கட்டுமானத்தில் பயன்படுத்தலாம். இவற்றை 'சுகர்கிரீட்' என்று அழைப்பர்.
கான்கிரீட்டைக் காட்டிலும் இது மிக வேகமாகக் காய்ந்து கெட்டியாகி விடும். கான்கிரீட்டைக் காட்டிலும், இதை உருவாக்கும் செலவு குறைவு. அதுமட்டுமில்லாமல் 'சுகர்கிரீட்' கட்டி சம அளவுடைய கான்கிரீட்டைக் காட்டிலும் மிகக் குறைவான எடை கொண்டிருக்கும்.
அதிகளவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் இது பயன் தரும். கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இது கூடுதல் வருமானத்தையும் ஈட்டித்தரும். இதனால் கரும்புச் சக்கை புதைக்கும் வேலையும் மிச்சமாகும். கான்கிரீட்டில் பயன்படும் 'போர்ட்லாண்ட் சிமென்ட்' தயாரிப்பினால் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. 'சுகர்கிரீட்' தயாரிப்பில் சிமென்ட் தேவைப்படாது. இதனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை.
விஞ்ஞானிகள் ஏற்கனவே, 'சுகர்கிரீட்' பயன்படுத்தி தரையில் பதிக்கும் பலகைகளைக் கட்டுமானத்தில் பயன்படுத்தி காட்டியுள்ளார்கள்.
இதில் வழக்கமான கான்கிரீட்டை விடக் குறைவான இரும்புக் கட்டுக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த 'சுகர்கிரீட்' சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் பரவலான பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.