PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

ஒரு நோய்க்கு பொதுவாக பலவித முறைகளில் மருந்து தரலாம். ஊசி மூலம் செலுத்துவது ஒருமுறை என்றால், வாய்வழியாகத் தருவது இன்னொருமுறை. வாய் வழியே தருவது தான் சுலபமான, அதிகம் செலவில்லாத முறை.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மருந்து செரிமான மண்டலத்தின் கடுமையான ரசாயன சூழலைக் கடந்து சென்று, குறிப்பிட்ட உடல் உறுப்பைச் சேருவதற்குள் அதன் தன்மை மாறி, வலு குறைந்துவிடக் கூடும். இதற்காகத் தான் ஊசி மூலமான மருந்து தரும் முறை பின்பற்றப்படுகிறது. குறிப்பாக ஆர்.என்.ஏ., தொடர்புடைய மருந்துகள் ஊசி மூலம் மட்டுமே தரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான் பசுவின் பாலில் உள்ள ஒருவித நானோ பொருளான எக்ஸ்ட்ராசெல்லுலார் வெசிகிள்ஸ், ஆர்.என்.ஏ. மருந்துகளை வாய்வழியாகத் தர உதவி செய்யும் என இங்கிலாந்தைச் சேர்ந்த கிங்ஸ் கல்லுாரி ஆய்வாளர்கள் கண்டறிந்து ள்ளனர்.
'எக்ஸ்ட்ரா செல்லுலார் வெசிகிள்ஸ்' என்பவை குறிப்பிட்ட செல்லுக்கு புரதம், கொழுப்பு, ஆர்.என்.ஏ., முதலியவற்றை அனுப்ப உதவுபவை.
இவற்றைச் சுற்றி கொழுப்புப் படலம் இருப்பதால், உடலுக்குள் உள்ள அமிலங்களால், இது பாதிக்கப்படுவதில்லை. இவை பசுவின் பாலிலும் உள்ளன. இவற்றின் மீது ஆர்.என்.ஏ.,வை ஒட்ட வைத்து, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது சோதித்துப் பார்த்தனர். எலிகளின் நோய் குணமாகத் துவங்கியது.
விரைவில் இந்த முறை மனிதர்களின் நோய் சிகிச்சையில் பயன்படும். பசுவின் பாலைப் பெரும்பாலான மனிதர்கள் பருகுவதால் எந்த வித ஒவ்வாமையும் ஏற்படுத்தாது என்பது கூடுதல் சிறப்பு.

