PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

அண்டை கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடல் நடந்து கொண்டிருக்கும் சம காலத்தில்கூட நம் சொந்த கிரகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா?
ஆம், உண்மை தான் என்கிறது சமீபத்திய கண்டுபிடிப்பு. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு சிலி. மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்த நாட்டில் தான் இதுவரை அறியப்படாத 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தி சாலாஸ் ஒய் கோமெஸ் ரிட்ஜ் (The Salas y Gomez Ridge) என்பது சிலி நாட்டின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மலைத்தொடர். கடலுக்கு அடியில் இருக்கும் இந்த மலைத் தொடர்கள் 2,900 கி.மீ., நீளம் கொண்டவை. டெக்சாஸ் உள்ளிட்ட சில சர்வதேசப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 40 நாட்கள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தான் பல புதிய இனங்களைச் சேர்ந்த மீன்கள், பவளப்பாறைகள், கடற்பஞ்சுகள், நண்டுகள், கடல் அட்டைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் கண்பிடிக்கப் பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்த அரிய கண்டுபிடிப்பு கடல் உயிரினங்கள் பற்றிய நம் புரிதலை அதிகப்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

