/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
ஆட்டிசம் ஏற்படுத்துமா பிளாஸ்டிக்?
/
ஆட்டிசம் ஏற்படுத்துமா பிளாஸ்டிக்?
PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நெகிழிப் (பிளாஸ்டிக்) பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் கேடானது என்பதை அறிவோம். ஆனால், நாம் நினைத்ததை விட நெகிழி மோசமானது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ளோரே நரம்பியல் மையம் மேற்கொண்ட ஆய்வில் பிஸ்பினால் ஏ (Bisphenol A - BPA) எனும் வேதிப் பொருளால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படுவது தெரியவந்தது. இந்த பி.பி.ஏ., பலவகையான நெகிழிப் பொருட்கள் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் நெகிழி பாட்டில்கள் முதல் உணவுப் பொருட்களை பேக் செய்யும் பிளாஸ்டிக் கவர்கள் வரை அனைத்திலும் பி.பி.ஏ., உள்ளது.
இதனால் சுலபமாக நம் உடலில் சேர்ந்துவிடுகிறது.
இதன் வடிவமும், செயல்பாடும் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் நாளமில்லா சுரப்பியை ஒத்து இருக்கும். இதனால் நம் உடலில் பல பிரச்னைகள் வருகின்றன.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களின் உடலில் இது இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் (Autism spectrum disorder - ASD) வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஏ.எஸ்.டி. உலகில் நூற்றில் ஒரு குழந்தையைப் பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த பாதிப்புள்ள குழந்தைகளால் பிற குழந்தைகள் போல் தெளிவாகப் பேச, கற்க, செயல்பட இயலாது. இது ஏற்பட பொதுவாக மரபியல், சிறுவயதில் வளரும் சூழல் இவை தான் காரணம்.
என்றாலும் சமீபத்திய ஆய்வுகள் சில புதிய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளன. அதாவது ஆண்குழந்தை கருவில் உருவாகும்போது அதன் மூளையில் அரோமடேஸ் (Aromatase) எனும் நொதியின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த பி.பி.ஏ. அதன் சுரப்பிற்கு இடையூறு செய்கிறது. இதுவே அந்தக் குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கிறது.
ஆகவே இந்த வேதிப்பொருள் நம் உடலில் சேராமல் இருக்க நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.