PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM

பெருகி வரும் மின்னணு வணிகத்தால் எல்லாப் பொருட்களுமே அட்டைப் பெட்டிகளில் கட்டப்பட்டே அனுப்பப்படுகின்றன. பயணத்தின்போது பொருட்கள் உடைந்து விடக்கூடாது என்பதற்காக EPS எனப்படும் 'எக்ஸ்பாண்டட் பாலிஸ்ட்ரீன்' மெத்தைப் பஞ்சினால் பொருட்கள் சுற்றப்படுகின்றன.
இந்தப் பஞ்சு பெட்ரோலியப் பொருட்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. இது எடுக்கப்படும் முறை சுற்றுச்சூழலுக்குக் கேடானது. இதை மறுசுழற்சியும் செய்ய இயலாது. இவை, பயன்பட்ட பின் அப்படியே பூமியில் பயனின்றி புதைக்கப்படுகின்றன. இதனால் மண் மாசுபடுகிறது.
இதற்கு மாற்றாக அட்டைப்பெட்டி கழிவுகளையே பயன்படுத்தலாம் என்று சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முதலில் பயன்படுத்தப்பட்டுத் துாக்கி எறியப்படும் அட்டைப் பெட்டிகள் சேகரிக்கப்பட்டு, உடைக்கப்படுகின்றன.
துாள் துாளாக ஆக்கப்பட்டு, செல்லுலோஸ் நார்கள் ஆக்கப்படுகின்றன. பின்பு இவற்றோடு 'கிளிசரால் கெலட்டின்' அல்லது 'பாலிவினைல் அசிடேட்' பசை சேர்க்கப்படுகிறது.
இந்தக் கலவையை வேண்டிய வடிவங்களில் செய்ய, அச்சுகளில் ஊற்றப்பட்டு, குளிர்விக்கப்படுகின்றன. இறுதியில் இயற்கையாக மக்கக்கூடிய மெத்தைப் பஞ்சு கிடைக்கிறது. பெட்ரோலிய பஞ்சை விட இவை மிகக் குறைவான வெப்பம் கடத்தும் தன்மை கொண்டுள்ளன என்பது கூடுதல் நன்மை ஆகும்.
இதன் அடுத்தக் கட்ட ஆய்வாக பஞ்சு தயாரிக்கும் முன்னர், கலவையில் சிலிக்கான் திரவம் சேர்த்துப் பார்த்தனர். இது பஞ்சின் வலிமையை அதிகரித்தது. இதன் மீது சுத்தியல் விழுந்தால் கூட தாங்கும் பலம் பெற்றது. வெகு விரைவில் இது சந்தைக்கு வரும். பொருட்களை இவற்றைக் கொண்டு சுற்றினால் தவறி விழுந்தாலும் பொருட்களுக்குச் சேதாரம் இருக்காது.