/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
ரோஜாக்களுக்கும் 'ஜியோமிதி' தெரியும்!
/
ரோஜாக்களுக்கும் 'ஜியோமிதி' தெரியும்!
PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

பல நுாற்றாண்டுகளாக, கவிஞர்களும் ஓவியர்களும் ரோஜா இதழ்களின் கூர்மையான நேர்த்தியைப் புகழ்ந்தனர்.
விஞ்ஞானிகளோ, மற்ற மலர்கள் மாதிரியில்லாமல், ரோஜாக்கள் கலைநயமிக்க ஜியோமிதி வடிவியலுடன் சுருள்வதைக் கண்டு வியந்தனர். தற்போது, ஒரு ஆராய்ச்சி, ரோஜாவின் அலங்காரத்திற்குப் பின்னே உள்ள கணித ரகசியத்தை கண்டறிந்துள்ளது.
ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை ஆய்வாளர்கள் 100க்கும் மேற்பட்ட ரோஜா இதழ்களை ஆராய்ந்தனர்.
பிற பூக்களின் இதழ்கள், சீரற்ற வளர்ச்சி வேகத்தால், அவற்றின் வடிவத்தை அடைகின்றன என்றால், ரோஜா இதழ்கள், ஒரு பகுதி மட்டுமே சீராக வளர, வெளிப்பகுதிகள் வளர்ச்சியடையாமல் இருப்பதால் ஏற்படும் முரண்பாட்டால், தனித்துவமான வடிவத்தை அடைகின்றன.
கணிதத்தில், இந்த முரணை, 'மெய்னார்டி--கோடாஸ்ஸி- - பீட்டர்சன்' பொருந்தாமை என்கின்றனர்.
இளம் இதழ்கள் மென்மையாக வளரத் துவங்குகின்றன. வளரும்போது, மையத்திலிருந்து விளிம்பு வரை மட்டுமே வளர்கிறது. விளிம்பு பின்தங்கிவிடுகிறது. இந்த வேறுபாடு 'வடிவியல் விரக்தியை' ஏற்படுத்தி, இதழ் சுருங்கி, கூர்மையான முனைகளை உருவாக்குகிறது.
இதை நிரூபிக்க, ஆய்வாளர்கள் பிளாஸ்டிக் மாதிரிகளை உருவாக்கி சோதித்துப் பார்த்தனர்.
அதே வளர்ச்சி வேக முரண்பாட்டை, பிளாஸ்டிக் இதழ் வடிவமைப்பில் உருவாக்கியபோது, அதிலும் ரோஜா போல விளிம்பு சுருண்டு, மடிந்து கூர் முனைகள் உருவாயின. தாவரவியல், ஜியோமிதி தத்துவத்தை பின்பற்றி இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது கட்டடக்கலை, மருத்துவம், ரோபோவியல் மற்றும் விரிந்து மடிக்கப்படும் பொருட்கள் போன்ற துறைகளில் உதவும் என, பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.