PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

பயிர்கள் செழித்து வளர்வதற்கு உரம் அவசியம். உரங்கள் பெரும்பாலும் பொடியாகவோ திரவமாகவோ நிலத்தின் மீது துாவப்படுகின்றன. நாம் துாவுகின்ற உரத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே தாவரங்களின் வேர்களை அடைந்து பயன்படுகிறது. குறிப்பிட்ட சதவீத உரம் நைட்ரஸ் ஆக்ஸைட் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களாக மாறி காற்றில் சேர்கிறது.
குறிப்பிட்ட சதவீத உரம் மழை பெய்யும்போது அல்லது நீர்ப் பாசனம் செய்யும் போது நீரில் கரைகிறது. உரம் கலந்த இந்த நீர் நிலத்தடி நீருடனோ, ஏரி குளங்களின் நீருடனோ சேர்ந்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஏரிகளில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. துாவப்பட்ட உரம் இப்படி வீணாவதால் விவசாயிகள் மீண்டும் மீண்டும் உரம் போட வேண்டிய தேவை இருக்கிறது.
இதைச் சரி செய்யும் நோக்கத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய உரத்தை உருவாக்கி உள்ளனர். இது பார்ப்பதற்குக் கண்ணாடித் துண்டுகள் போல இருக்கும். ஆனால் இந்தக் கண்ணாடி, நீரில் கரையக்கூடிய ஆக்சைடால் ஆனது. இதற்குள்ளே கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் இருக்கும். பொதுவாக இந்தத் துகள்களின் அளவு 0.85 மில்லி மீட்டரில் இருந்து 2 மில்லி மீட்டர் இருக்கும்.
இதை நாம் மண்ணில் துாவினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் பட்டுக் கரையும். உள்ளே இருக்கின்ற சத்துகள் மெதுவாக ஆனால் முழுமையாகத் தாவரங்களைச் சென்று அடையும். எனவே அடிக்கடி உரம் போட வேண்டியதில்லை. செலவும் குறைகிறது. நீர்நிலை மாசுபாடும், பசுமை இல்ல விளைவும் குறைகின்றன. விஞ்ஞானிகள் இதை நேரடியாக விவசாய நிலத்தில் பயன்படுத்திப் பார்த்தபோது நல்ல முடிவு கிடைத்தது.