PUBLISHED ON : ஜூன் 11, 2026 07:25 AM

மனிதனின் முதுமையை தள்ளிப்போடும் ரகசியம் நமது குடலிலேயே மறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'டைஜெஸ்டிவ் டிசீஸ் வீக் 2026' மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, வயதான எலிகளின் குடலில் இளமையான நுண்ணுயிரிகளை மீண்டும் செலுத்தியபோது, அவை உயிரியல் ரீதியாக இளமையடைந்ததுடன், கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதிலிருந்தும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன.
இந்த சோதனைக்காக, எலிகள் இளமையாக இருந்தபோது சேகரிக்கப்பட்ட குடல் நுண்ணுயிரிகளை, அவற்றின் முதுமைக் காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செலுத்தினர்.
இதனால் அந்த எலிகளுக்கு உடலில் ஏற்படும் அழற்சியும், டி.என்.ஏ., சேதாரங்களும் குறைந்து, கல்லீரல் திசுக்கள் ஆரோக்கியமடைந்தன.
மேலு ம், புற்றுநோயை உருவாக்கும் 'எம்டிஎம்2' என்ற மரபணுவின் அளவும் கணிசமாகக் குறைந்து, மூலக்கூறு அளவில் அவை இளம் எலிகளைப் போலவே மாறின. நமது செரிமான அமைப்பில் வாழும் பல கோடிக் கணக்கான நுண்ணுயிரிகளின் தொகுப்பு, மனிதர்களின் முதுமையைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்ற வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்குகிறது.
தற்போது எலிகளில் மட் டுமே நிரூபிக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மனிதர்களின் வயது முதிர்வு தொடர்பான நோய்களைக் குறைத்து, ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
