PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

மின் சாதனங்கள் என்றாலே அதிகப்படியான பயன்பாட்டின்போது சூடாவது இயல்பான விஷயம். மின்சார ஆற்றலின் பக்க விளைவாக இந்த வெப்பம் உருவாகிறது. அதிகப்படியான வெப்பம் மின் சாதனங்களைப் பழுதடையச் செய்கிறது. இதனால், அதை வெளியேற்றுவதற்கு, வெப்பத்தை நன்றாகக் கடத்தக்கூடிய தாமிர அல்லது அலுமினிய தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக இவை மின்சாரத்தையும் கடத்துவதில் வல்லவையாக உள்ளன. அதனால் இந்தத் தகடுகளின் மேலே பொருத்த மின்சாரத்தைக் கடத்தாமல், வெப்பத்தை மட்டும் கடத்தும் ஒரு படலம் அவசியமாகிறது.
இதற்கு வைரங்களைப் பயன்படுத்த முடியும் என, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரவுன் ஹோவர் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. வைரங்கள் வெப்பத்தை மிகச்சிறந்த முறையில் கடத்துபவை. ஆனால், மின்சாரத்தைக் கடத்தும் இயல்பு அவற்றுக்கு இல்லை. இந்த இயல்பினால் இவற்றை மின் சாதனங்களில் பயன்படுத்துவது பொருத்தமான ஒன்றாகிறது.
வைரங்களை மிக நுண்மையாக நுணுக்கி, நானோ அளவில் மெல்லிய சிலிகான் படலத்தின் மீது வைத்து, வைர படலத்தை உருவாக்க முடியும். இந்தப் படலத்தைத் தாமிரத் தகடுகள் மீது பொருத்திவிட்டால் போதும், வெப்பம் வெளியேற்றப்பட்டுவிடும்.
அதேபோல இந்த வைரப் படலங்களை, சார்ஜ் செய்யும் சாதனங்களில் பயன்படுத்தினால் அவை 5 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகும். ஆய்வுக்கூடங்களில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ள இந்த வைரப் படலங்கள் விரைவில் மின் வாகனங்கள், இன்வெர்ட்டர், இன்ன பிற மின் சாதனங்களில் பயன்பாட்டிற்கு வரும்.

