PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

மின்சார விளக்குகள் வராத காலத்தில், இரவு உணவை மாலையிலேயே உண்டுவிட்டு உறங்கச் செல்லும் வழக்கம் இருந்தது.
இன்றும் கூட சிலர், சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதை ஒரு மரபாகவே பின்பற்றி வருகின்றனர். இது, உடலுக்கு நல்லது என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலை, அதிக உடல் பருமன் கொண்ட, 50 - 70 வயதுக்கு உட்பட்ட 26 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது.
இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இரு குழுவுக்கும் ஒரே கலோரி அளவுள்ள உணவு, வெவ்வேறு நேரங்களில் கொடுக்கப்பட்டது.
அதாவது, தினசரி கலோரி தேவையில் 45 சதவீதத்தை, குழு 'ஏ'வுக்கு மாலை 5:00 மணிக்கு முன்னரும், குழு 'பி'க்கு மாலை 5:00 மணிக்கு பின்னரும் தந்தனர். இரு குழுவினரின் ரத்த சர்க்கரை அளவு, இதயச் செயல்பாட்டை பரிசோதித்தனர்.
குழு 'ஏ'வைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், குழு 'பி'யைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் கெட்டிருப்பதும் தெரிய வந்தது.இந்த ஆய்வின் மூலம், நம் உணவின் பெரும்பகுதியை அதாவது தினசரி கலோரி தேவையில் 45 சதவீதத்தை, மாலை 5:00 மணிக்குள் எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் தரும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.