/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
ரோபோக்களுக்கு மனித வடிவ கைகள் ரெடி!
/
ரோபோக்களுக்கு மனித வடிவ கைகள் ரெடி!
PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

வித்தியாசமான ரோபோ கரம் ஒன்றை உரு வாக்கியிருக்கிறது சீனாவின் வூஜி டெக். 'ஹ்யூமனாய்டு' எனப்படும் மனித வடிவ ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய இயந்திரகண், காது, கை, கால், மூட்டுகள் போன்ற தனித்தனி பாகங்களை தயாரிக்க, இன்று சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. வூஜி டெக்கின் ஐந்து விரல் ரோபோ கரம், மனித உருவ ரோபோக்கள் மற்றும் தொழிற்சாலை ரோபோக்களுக்கு பொருத்தக்கூடிய வகையில் உருவாக்கபட்டுள்ளது.
இந்த ரோபோ கையின் எடை, 600 கிராமுக்கும் குறைவு. இதன் விரல்களும் மணிக்கட்டும் 20 டிகிரி கோணம் வரை அசையும் திறன் கொண்டது. இதன் விரல்நுனி விசை கிட்டத்தட்ட 15 நியூட்டன் அளவுக்கு இருக்கும். இந்த உலோகக் கையால் ஏறத்தாழ 10 கிலோ எடையுள்ள பொருட்களை பிடித்துத் துாக்க முடியும்.
இந்த 'வூஜி கை'யின் விலை தோராயமாக 4.84 லட்சம் ரூபாய் ஆகும். இது, ஆய்வுக்காகத் தனியாக வடிவமைக்கப்படும் விலையுயர்ந்த ரோபோ கைகளின் விலையைவிடக் குறைவுதான். தவிர, இது மற்ற நிறுவன ரோபோக்களை இயக்கும் மென்பொருளை எழுதும் டெவலப்பர்களுக்கான மென்பொருளுடன் வருகிறது. இதனால், பிற ரோபோக்களுக்கு, உடனடியாகப் பூட்டிப் பயன்படுத்த முடியும். அதோடு, இந்தக் கைகளுக்கு புதிய வித்தைகளையும் கற்றுத்தர முடியும்.
இந்தக் கையை அதிக அளவில் தயாரிக்க முடிந்தால், வெறும் காட்சிப் பொருளாக இல்லாமல், ஒரு அவசியமான கருவியாக மாறும். ரோபோக்களுக்கு, மனிதக் கைகளைப் போன்றே செயல்படும் கைகளை வடிவமைத்து தயாரிக்கும் பொறியியல் செலவைக் குறைப்பதன் வாயிலாக, மனிதனைப் போலவே நடமாடும் ரோபோக்களை நிஜ உலக வேலைகள் மற்றும் தொழிற்சாலைப் பணிகளுக்கு விரைவாகக் கொண்டுவர முடியும்.