PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

வலுவாக ஒரு விஷயத்தைப் பற்றுவதை உடும்புப் பிடி என்போம். உடும்புகள் ஒன்றைப் பிடித்துவிட்டால் விடாது. அதற்குக் காரணம் அவற்றின் தாடை, பற்களின் வலிமை. இந்த உடும்புகளில் ஒரு வகை தான் 'கொமோடோ டிராகன்கள்.' இவை இந்தோனேசியாவில் மட்டுமே வாழ்பவை. 9.8 அடி நீளம் வரை வளரக்கூடிய இவை, 150 கிலோ வரை எடை கொண்டிருக்கும். ஒட்டுமொத்த பல்லி இனங்களிலேயே இவை தான் மிகப் பெரியவை. காட்டுப்பன்றிகள், எருமைகள், ஏன் சிலநேரங்களில் மனிதர்களைக் கூட வேட்டையாடி உண்ணும்.
இவற்றின் பற்கள் வடிவத்தால் பழங்கால டைனோசர்கள் போல் இருப்பது ஏற்கனவே ஆய்வாளர்கள் அறிந்தது தான். ஆனால், சமீபத்தில் லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லுாரி ஆய்வாளர்கள் இவற்றின் பற்களை ஆராய்ந்துள்ளனர். லண்டன் வன உயிரியல் பூங்காவில் 15 வயது வரை வாழ்ந்த ஓர் உடும்பின் பற்களை ஆராய்ந்தபோது அவற்றில் இரும்புச் சத்து இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுவாகவே பல்லி இனங்களின் பற்களில் குறைந்தளவு இரும்பு இருக்கும். ஆனால், இந்த உடும்புகளின் பற்களில் மிக அதிக அளவிற்கு இரும்பு உள்ளதை அவற்றின் பற்கள் மீதுள்ள இளஞ்சிவப்பு நிறக் கறைகள் புலப்படுத்துகின்றன. இதேபோல் தான் பழங்கால டைனோசர்கள் பற்களிலும் இரும்பு இருந்திருக்கக் கூடுமோ என்று விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர். துரதிஷ்டவசமாக அவை தொல்லெச்சங்கள் ஆகிவிட்டதால் இந்த அனுமானத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.