PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

உடலை நன்று நீட்டி, கையைத் தரையில் ஊன்றி, காலை முன்னோக்கி வீசி, உடலை வளைத்துக் காற்றில் சுழற்றி, மீண்டும் உடலை கைகளால் தரையில் நிலைநிறுத்தி... அப்பப்பா படிக்கும்போதே தலை சுற்றுகிறதா? எனில் இப்படியாகக் குட்டிக்கரணம் அடித்தால் எப்படித் தலைச் சுற்றும்? சிறு குழந்தைகளாக இருந்தபோது செய்திருப்போம், இப்போது செய்யச் சொன்னால் பலர் முடியாது என்று விலகி விடுவர். வெகு சில விளையாட்டு வீரர்களால் மட்டுமே அதுவும் உரிய பயிற்சி பெற்றே குட்டிக்கரணம் அடிக்க முடியும். ஆனால் குட்டியான பூச்சி ஒன்று அசால்டாக சம்மர்சால்ட் அடிக்கிறதென்றால் நம்ப முடிகிறதா?
தனது உடலில் உள்ள வால் போன்ற பகுதியால் குளோபுலார் ஸ்ப்ரிங்டெயில் (Globular springtail) என்று நாமகரணம் சூட்டப்பட்ட பூச்சிதான் அந்தக் குட்டிக்கரண கில்லாடி. இது தனக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதிவேகத்தில் தலைகீழாகக் குட்டிக்கரணம் அடித்துத் தப்பித்து விடும். எவ்வளவு வேகம் என்றால், நம்முடைய சாதாரண கேமராக்களால் போட்டோ, வீடியோவே எடுக்க முடியாத வேகம்.
அமெரிக்காவைச் சேர்ந்த வட கரோலினா ஸ்டேட் பல்கலை அதிநவீன கேமராக்களைக் கொண்டு நொடிக்கு 40,000 பிரேம்கள் என்ற கணக்கில் இதைப் படம் எடுத்தது. இந்த வீடியோவை ஆராய்ந்த அறிவியலாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்தப் பூச்சி ஒரு நொடியில் ஆயிரத்திலொரு பங்கு நேரத்தில் குட்டிக்கரணம் அடிக்கிறது. தலைகீழாகக் குதித்துத் தரையிறங்குவதற்குள் தனது உடலைக் காற்றில் ஒரு நொடிக்கு 368 சுற்றுகள் சுற்றிவிடுகிறது. இது எந்த உயிரினத்தாலும் செய்ய முடியாத சாதனை.
1 - 2 மி.மீ., மட்டுமே நீளமுள்ள இந்தப் பூச்சி 62 மி.மீ., உயரம் காற்றில் தாவி, 102 மி.மீ., துாரத்தைக் கடக்கிறது. இவ்வளவுதானா என எண்ண வேண்டாம். இது சரியாக 5 அடி 7 அங்குலம் உயரமுள்ள ஒரு மனிதன் குட்டிக்கரணம் அடித்து, 230 அடி உயரம் பறந்து, தொடங்கிய இடத்திலிருந்து 380 அடி துாரத்தில் தரை இறங்குவதற்குச் சமம். எந்த மனிதனாலும் இதைச் சாதிக்க முடியாது. இந்தச் சிறிய பூச்சிக்கு இயற்கை இப்படி ஓர் ஆற்றலை அளித்துள்ளது ஆச்சரியமானது தானே?