PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

நம் உடலில், 'லெப்டின்' எனும் ஒரு ஹார்மோன் இருக்கிறது. இது, நம் உடலுக்கு உணவு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், உணவு உண்ட பின் அது போதுமா என்பது பற்றியும் மூளைக்கு தகவலை அனுப்பும்.
சிலர் உடலில் இந்த ஹார்மோன் சரியாக வேலை செய்யாததால், உடலுக்கு தேவையான அளவு உணவு சாப்பிட்ட பின்னரும் உணவு உண்ட திருப்தி ஏற்படாது. இதனால், அதிகமான உணவை உட்கொண்டு உடல் எடை அதிகரிக்க நேரிடும்.
இந்த ஹார்மோனை துாண்டக்கூடிய ஆற்றல், 'செலஸ்ட்ரால்' என்ற வேதிப் பொருளுக்கு உண்டு. இதை எலிகளில் சோதித்து பார்த்தபோது, அவற்றின் உடல் எடையை கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல மனிதர்களிலும் இது வெற்றியை தந்திருக்கிறது. ஆனால், இதை செயற்கையாக ஆய்வுக்கூடங்களில் உருவாக்குவது அவ்வளவு சுலபமானது அல்ல.
இதற்கு தான் இயற்கையாக இது கிடைக்கக்கூடிய தாவரங்களை ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் சீனாவில் பல 100 ஆண்டுகளாக மருத்துவத்திற்கு பயன்படும், 'தண்டர் காட் வைன்' என்ற ஒரு செடியில் இயற்கையாகவே இந்த வேதிப்பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இந்தச் செடியில் ஏராளமான நச்சுத்தன்மை இருப்பதால், நமக்கு தேவையான மருந்தான இந்த வேதிப்பொருளை மட்டும் அதிலிருந்து பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால், 'ஈஸ்ட்' எனப்படும் பூஞ்சையை வைத்து சுலபமாக பிரித்தெடுக்கும் வழியை, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கோப்பென்ஹேகன் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இவ்வாறு பூஞ்சை மூலம் மருந்தை பிரித்தெடுப்பது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். அதோடு இந்த முறையில் அதிக அளவிலான செலஸ்ட்ராலை உருவாக்க முடியும்.
அவ்வாறு உருவாக்கினால், உடல் பருமன் சார்ந்த பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.