/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
செவ்வாயில் வாழ்ந்த நுண்ணுயிரிகள்
/
செவ்வாயில் வாழ்ந்த நுண்ணுயிரிகள்
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா'வால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது பெர்செவரன்ஸ் ரோவர் எனும் ஊர்தி. இது செவ்வாயில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் தான் செவ்வாயில் தண்ணீர் ஓடிய சில தடயங்களை நமக்குக் காட்டியது.
இந்த ஊர்தியில் இரண்டு கருவிகள் உள்ளன. ஒன்று பி.ஐ.எக்ஸ்.எல்., எனும் எக்ஸ்ரே கருவி. மற்றொன்று உயிர்கள் வாழும் சூழலைக் கண்டுபிடிக்கின்ற 'ஷெர்லாக்' எனும் கருவி. பொதுவாக பூமியில் கரிமப் பொருட்களைச் சுற்றி சில விதமான இரும்பு நிறைந்த தாதுக்கள் காணப்படும். இந்தக் கருவிகள் செவ்வாயில் இதேபோன்ற அமைப்பைக் கண்டறிந்துள்ளன.
செவ்வாயில் 'செயாவா' அருவி என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள குறிப்பிட்ட பாறைகள் மீது இரண்டு இரும்புத் தாதுக்களை இந்தக் கருவிகள் கண்டறிந்துள்ளன. இந்தப் பாறைகள் உள்ள இடம் 'லெபோர்ட் ஸ்போர்ட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. நுண் உயிரிகளின் செயல்பாடு இல்லாமல் இப்படியான பாறை அமைப்புகள் மீது இரும்புத் தாதுக்கள் நீண்டகாலம் ஒட்டி இருக்க சாத்தியம் இல்லை. ஒருவேளை அப்படி ஒட்டி இருக்க வேண்டும் என்றால் அதீத வெப்பம், அமிலத்தன்மை, கரிமப் பொருட்கள் ஆகியவை அங்கே இருக்க வேண்டும். ஆனால் இந்தப் பகுதியில் மேற்கண்ட மூன்று விஷயங்களும் இல்லை.
எனவே நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் தான் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் இந்தப் பகுதியில் நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை இன்னும் உறுதியாகக் கூற முடியும் என்கின்றனர்.