/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
தசைகளை தூண்டி கொழுப்பை எரிக்கும் மாத்திரை
/
தசைகளை தூண்டி கொழுப்பை எரிக்கும் மாத்திரை
PUBLISHED ON : டிச 04, 2025 07:44 AM

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இப்போதுள்ள முறைகளை தலைகீழாக மாற்றக் கூடிய ஒரு புதிய மருந்து வந்துள்ளது. சுவீடனின் கரோலின்ஸ்கா நிலையமும் ஸ்டாக்ஹோம் பல்கலை ஆய்வாளர்களும் இதை உருவாக்கியுள்ளனர்.
தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள சில மருந்துகள், பசி உணர்வை கட்டுப்படுத்தி, உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதன் வாயிலாக எடையைக் குறைக்கின்றன. ஆனால், இந்த புதிய மருந்து பசியை அடக்குவதில்லை. அதற்குப் பதிலாக, எலும்போடு இணைந்துள்ள 40 சதவீத தசைகளின் வளர்சிதை மாற்றத்தைத் துாண்டிவிடுகிறது. இதனால், தசைகள் வலுவிழக்காமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உபரியாக உள்ள கொழுப்பு மட்டும் எரிக்கப்படுகிறது.
இதன் முதற்கட்ட சோதனைகளில், உணவுக் கட்டுப்பாடின்றியே ரத்த சர்க்கரை அளவு சீராவதும், கொழுப்பு கரைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் தசை இழப்போ, உடல் பலவீனமோ இதில் ஏற்படுவதில்லை.
மூளை அல்லது குடலை ஏமாற்றி பசியைக் குறைப்பதற்குப் பதிலாக, உடலின் 'கலோரி எரிக்கும் இயந்திரமான' தசைகளை நேரடியாகச் செயல்பட வைப்பதே இந்த மருந்தின் உத்தி. மருத்துவப் பரிசோதனைகளில் இது வெற்றி பெற்றால், உடல் மெலிவதோடு மட்டுமல்லாமல் வலிமையாகவும் இருக்க உதவும் அரிய சிகிச்சையாக இது அமையும்.

