PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' டிசம்பர் 24ம் தேதி ஓர் உலக சாதனையைப் புரிந்துள்ளது. 'நாசா'வால் அனுப்பப்பட்ட பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்றுள்ளது. இதுவரை மனிதர்களால் உருவாக்கப்பட்ட எந்த விண்கலமும் இவ்வளவு அருகில் சென்றது இல்லை. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சூரியனிலிருந்து 61 கோடி கிலோமீட்டர் துாரத்தில் உள்ள புள்ளி வரை இந்த விண்கலம் சென்றுள்ளது.
இது மணிக்கு 6 லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது. இதுவரை மனிதர்களாக உருவாக்கப்பட்ட பொருட்களிலேயே மிக வேகமாகப் பயணம் செய்தது இது தான்.
சூரியனின் வளிமண்டலமான கொரோனா, 5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டிருக்கும்.
சோலார் ப்ரோப் விண்கலம் அதிகபட்சமாக 1,427 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும் வகையிலான கார்பன் போம் கவசத்தைக் கொண்டுள்ளது. அதனால் தான் இவ்வளவு அருகே செல்ல முடிந்துள்ளது.
இது 'நாசா'வின் சாதனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சாதனையும் தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வளவு அருகே சென்று சூரியனை ஆராய்வதற்குக் காரணங்கள் உண்டு. சூரியனில் புயல் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்து நுட்பமாக அறிந்துகொள்வதும், அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வதும் தான் இதன் நோக்கம்.
இந்த ஆண்டு மார்ச் 22, ஜூன் 19 ஆகிய தேதிகளில், விண்கலம் மீண்டும் ஒருமுறை சூரியனுக்கு அருகில் செல்லுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.

