PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

உலகிலேயே மிகவும் கருப்பான பூச்சு என்றால் அது வான்டா கருப்பு(Vantablack) தான். இது நானோ அளவுள்ள கரித்துகளால் ஆனது. இதைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். 2014ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் இதை உருவாக்கியது. ஆனால், இதற்கு சவால் விடும்படியான ஒரு புது நிறமியை கனடா நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
மரத்திலிருந்து செய்யப்பட்ட இந்தக் கரிய பொருளுக்கு நிக்சுலான் (Nxylon) என்று பெயரிட்டுள்ளனர். நிக்ஸ் என்பது கிரேக்கர் களில் இரவுக்குரிய கடவுளைக் குறிக்கும். சுலான் என்ற கிரேக்கச் சொல்லுக்கு மரம் என்று பொருள்.
மரக்கட்டையைத் தண்ணீர் ஒட்டாதவாறு மாற்றுவதற்காக முயற்சி செய்தபோது தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்புச் சாயம் பொதுவாக 2.5 சதவீத ஒளியை பிரதிபலிக்கும். ஆனால், டெக்சாஸ் பல்கலை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது 1 சதவீதத்திற்கும் குறைவான ஒளியையே பிரதிபலிப்பது தெரிந்தது. இது, வான்டா கருப்புப் பூச்சை விட அதிகம் தான் என்றாலும், எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்டு பிரதிபலிப்பு குறைக்கப்படும்.
இதை தொலைநோக்கிகள், சூரிய மின் செல்கள், நகைகள், கைக்கடிகாரங்களின் உள்பூச்சு ஆகியவற்றில் பயன்படுத்தலாம். வான்டாவை விட இதை குறைந்த விலையில் தயாரிக்க முடியும். ஒரு பெரிய மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நிக்சுலானை 2 லட்சம் கைக்கடிகாரங்களின் உள் பூச்சுகளுக்குப் பயன்படுத்த முடியும். எனவே குறைந்த செலவில் நிறைய பலனைப் பெறலாம்.