PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

மீன்கள் மிகவும் சத்தான உணவாக அறியப்படுகின்றன. உலகின் எல்லா நாடுகளிலும் மீன்களை விரும்பி உண்கின்றனர். இந்தத் தேவையை ஈடுசெய்ய பண்ணைகளில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இவற்றுக்கு சத்தான உணவைத் தந்தால் தான் நன்றாக வளரும். குறிப்பாகப் புரதம் அதிகளவில் தேவை. இதற்காகப் பிற மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு உணவாக்கப்படுகின்றன.
இதனால், அந்த மீன் இனங்கள் அழிகின்றன. மீன்களுக்கு மாற்றாக புரதங்களை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நுண்ணுயிரிகளை வளர்ப்பது அதிக செலவும், கவனமும் தேவைப்படுவதாக உள்ளது.
இயற்கையாகவே புரத உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளைக் கொண்ட பொருளை, ஆய்வாளர்கள் தேடிக் கொண்டு இருந்தனர்.
சிங்கப்பூரில் உள்ள என்.டி.யூ. பல்கலை, சோயா தயாரிப்பில் உருவாகும் கழிவுநீரில் இத்தகைய நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
குறைவான பிராணவாயு அளவில், 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நுண்ணுயிரிகள், இந்த நீரில் பல்கிப் பெருகின. புரதங்களை உற்பத்தி செய்தன. ஒரு பகுதி மீன்களுக்கு சாதாரண மீன் உணவையும், மற்றொரு பகுதி மீன்களுக்கு இந்தப் புரதத்தையும் ஆய்வாளர்கள் கொடுத்து வந்தனர்.
மீன் உணவில் கிடைக்கும் அதே சத்துகள், சோயா நீரிலும் கிடைப்பதை உறுதி செய்தனர். வீணாகும் சோயா நீரை ஊட்டச்சத்து மிக்க உணவாக மாற்றியது அறிவியல் உலகில் பாராட்டைப் பெற்றுள்ளது.

