PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இது உரிய வேகத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.
உலக வெப்பமயமாதலால் கடல் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அவற்றில் சில விலங்குகள் மாறுகின்ற வெப்ப நிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் துவங்கியுள்ளன. அவற்றுள் ஒன்று 'பச்சை ஆமை'. சைப்ரஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த ஆமைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் கரைக்கு வந்து முட்டையிடும். ஆனால், கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வழக்கத்தை விட சீக்கிரமாக வந்து தங்களுடைய முட்டைகளை இட்டுச் செல்கின்றன.
அதாவது கடலின் வெப்ப நிலை ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போதும், 6.4 நாட்கள் முன்கூட்டியே இவை கரைக்கு வருகின்றன. ஏனென்றால் வெப்பநிலை அதிகரிக்கும் போது முட்டைக்குள்ளே இருக்கின்ற குஞ்சு அழிந்து போக வாய்ப்புள்ளது. வெப்பநிலை மாறுவதற்கு ஏற்ப தன் இனத்தைக் தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஆமைகள் இப்படிச் செய்கின்றன.
ஆனால், இந்த யுக்தி நீண்ட நாள்களுக்குப் பயன் தராது. ஒரு கட்டத்தில் வெப்பநிலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் போது, இந்த ஆமை இனமே அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். எனவே, வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.

