PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

கடினமான பொருட்களை எந்தப் பசையும் இல்லாமல் திசுக்கள் போன்ற மிருதுவான பொருட்களுடன் ஒட்ட வைக்க முடியுமா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கிறீர்களா? 'எலெக்டோ அட்ஹிஷன்' எனும் இயல்பு இதனைச் சாத்தியப்படுத் தியுள்ளது. அதாவது, வெவ்வேறு பொருட்கள் அருகருகே இருக்கும்போது அவற்றின் வழியே மின்சாரத்தைச் செலுத்தினால் அவை ஈர்க்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். பின்பு எதிர் மின்னுாட்டத்தைச் செலுத்தினால் அவை பிரிந்துவிடும்.
சமீபத்தில் எலெக்ட்ரோ அட்ஹிஷனைச் சுவர்களில் ஏறும் ரோபோக்களில் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இதில் இரு உறுதியான பொருட்களைத் தான் பிணைக்கப்படுகின்றன. இந்த நுட்பத்தைக் கொண்டு உறுதியான பொருளை மிருதுவான பொருளுடன் ஒட்ட வைக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
அந்த வகையில் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலை பேராசிரியரான ஸ்ரீநிவாச ராகவன் தலைமையிலான குழு ஒன்று இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு வெற்றி பெற்றுள்ளது. ஆய்வுக் குழுவினர் வெள்ளீயம், கிராஃபைட், ஈயம் ஆகிய உலோகங்களை மிருதுவான காய்கறி, பழங்களுடன் ஒட்ட வைத்துள்ளனர். எதிர்மின்னுாட்டம் செலுத்தியபோது அவை தாமாகப் பிரிந்தன.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீருக்கடியில் உள்ள பொருட்களையும் சுலபமாக ஒட்ட வைக்க முடியும். எலெக்ட்ரோ அட்ஹிஷன் நிகழ வேண்டுமானால் உலோகங்களில் மின்சாரம் கடத்தும் அயனிகள் இருக்க வேண்டும். அதேபோல் மிருதுவான பொருட்களில் உப்பு அயனிகள் இருக்க வேண்டும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே குறைவான மின்கடத்தும் திறனுள்ள டைட்டானியம் போன்ற உலோகங்களையும், உப்பு குறைவாக உள்ள திராட்சை போன்ற பொருட்களையும் பிணைக்க இயலாது.
இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி ஹைப்ரிட் ரோபோ, பேட்டரி ஆகியவற்றில் பயன்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

