PUBLISHED ON : மே 07, 2026 07:50 AM

தாவரங்கள் மழை விழும் ஒலியை 'கேட்கும்' திறன் கொண்டவை என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் நிக்கோலஸ் மக்ரிஸ் தலைமையிலான குழு, நெல் விதைகள் மழைத் துளிகள் விழும் அதிர்வுகளுக்கு எதிர்வினையாற்று வதை கண்டறிந்துள்ளது. இந்த அதிர்வுகள் விதைகளின் முளைப்புத் திறனை 30 முதல் 40 சதவீதம் வரை வேகப்படுத்துகின்றன. இந்த ஆய்வு, தாவரங்களின் ஒலி உணர்திறனுக்கான முக்கிய ஆதாரம்.
பொதுவாக தாவரங்களுக்குள் புவிஈர்ப்பு விசையை உணர்வதற்கு, 'ஸ்டேடோலித்ஸ்' (Statoliths) எனும் நுண்ணிய செல் கட்டமைப்புகள் உள்ளன. அவையே இந்த அதிசயத்தை நிகழ்த்துகின்றன. மழைத்துளிகள் ஏற்படுத்தும் குறிப்பிட்ட அதிர்வுகள் இந்த கட்டமைப்புகளை அசைக் கின்றன. இதன் விளைவாக, நீர் விதையை வந்தடைவதற்கு முன்பே, வளரத் தேவையான உயிரியல் மாற்றங்கள் விதையினுள் தொடங்கிவிடுகின்றன. இது இயற்கையின் ஒரு நுட்பமான தகவலமைப்பு முறையாகக் கருதப்படுகிறது.
மழையின் ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டு, முளைப்பதற்கான சரியான நேரத்தைத் தாவரங்கள் தீர்மானிப்பது, அவை பிழைத்து வாழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இக்கண்டுபிடிப்பு, தாவரங்கள் எந்த வகையான ஒலி அதிர்வுகளுக்கு, வளர்ச்சியையும் விளைச்சலையும் தரக்கூடும் என்ற புதிய கோணத்திலான ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கலாம்.
