PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

இதற்கு முன், இதே முயற்சியை மின் வேதியியல் முறையில் பல நிறுவனங்கள் முயன்று வெற்றி கண்டன. ஆனால், 1 டன் கரியமில வாயுவை உற்பத்தி செய்ய 373 டாலர் தேவைப்பட்டது. இந்த நிலையில் தான் சீன அறிவியல் அகாடமி, 230 டாலரிலேயே இதை செய்து காட்டியுள்ளது.
முதல் கட்டமாக மின்சாரத்தை கொண்டு கடல் நீர் அமிலமாக்கப்படும். இதன் வாயிலாக கரியமில வாயு கடல் நீரிலிருந்து பிரிக்கப்படும். பிறகு கடல் நீர் அமிலத்தன்மை சீர் செய்யப்பட்டு வெளியேற்றப்படும்.
கரியமில வாயு பிஸ்முத் (bismuth) அடிப்படையிலான வினையூக்கி கொண்டு திரவ போர்மிக் அமிலமாக மாற்றப்படும். பிறகு விப்ரியோ நேட்ரைகென்ஸ் முதலிய சில நுண்ணுயிரிகள் உதவி யுடன் சக்சினிக் அமிலமாக மாற்றப்படும். மட்கக்கூடிய நெகிழிகளின் உற்பத்திக்கு தேவையான பாலிபியூட்டிலீன் சக்ஸினேட் ரசாயனம் தயாரிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, இதன் மூலம் கடல் அமிலத்தன்மையையும் குறைக்கலாம், மட்கும் நெகிழி உற்பத்தியை அதிகரித்து சுற்றுச் சூழலையும் காக்கலாம். ஒரே செயல்முறையில் இருவித பலன்களை பெறலாம்.
நம் வளிமண்டலத்தில் இருப்பது போல் 150 மடங்கு அதிகமான கரியமில வாயு ஏற்கனவே கடலில் உள்ளது. இதன் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், கடலின் அமிலத்தன்மை கூடி, கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். சமீபத்தில் சீன அறிவியல் அகாடமி, கடல் நீரிலிருந்து கரியமில வாயுவை பிரித்தெடுத்து, அதிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்திக்கு தேவையான ரசாயனங்களை தயாரிக்கும் முறையை உருவாக்கி உள்ளது.