/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
டிஜிட்டல் வடிவம் பெறும் எலியின் மூளை
/
டிஜிட்டல் வடிவம் பெறும் எலியின் மூளை
PUBLISHED ON : நவ 20, 2025 07:51 AM

அமெரிக்காவிலுள்ள ஆலன் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வாளர்கள், உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றைப் பயன் படுத்தி, எலியின் மூளையில் உள்ள ஒரு பகுதியை துல்லியமாக டிஜிட்டல் வடிவில் உருவகப்படுத்தியுள்ளனர். இது, உண்மையான உடற்கூறியல் தரவுகளின்படி இணைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மெய்நிகர் நியூரான்களைக் கொண்ட ஒரு மாதிரி.
மூளைக்குள் நிகழும் நுண்மின்னோட்டத்தின் ஏற்ற இறக்கங்கள், அயனி ஓட்டங்கள் மற்றும் நியூரான்கள் தன்னிச்சையாக இயங்கும் விதங்களை அசல் தன்மையுடன் இந்த டிஜிட்டல் மூளை உருவாக்கிக் காட்டும். மிகச்சிறிய மூளை திசுக்களுக்குப் பதிலாக, விஞ்ஞானிகள் இப்போது ஏறக்குறைய உயிர்த்துடிப்புள்ள மூளை நியூரான் களின் நெட்வொர்க்கை கணினி திரையில் முப்பரிமாண உருவில் ஆராயலாம். விலங்கு வதைக்கு எதிர்ப்புள்ள இன்றைய காலத்தில், இதையெல்லாம் உயிருள்ள விலங்குகளில் செய்வது சாத்தியமற்றது.
இந்த கண்டுபிடிப்பு, மூளை ஆய்வை எளிதாக்கி, விரைவாக்கும் என நம்பலாம். மெய்நிகர் மூளைகளில் இணைப்புகளை மாற்றிப் பார்க்கலாம். டிஜிட்டல் மூளையை சேதப்படுத் தலாம். அதன் வேதியியல் கட்டமைப்பை குலைத்துப் பார்க்கலாம்.
இப்போதைக்கு, எலி மூளையின் ஒரு சிறு பகுதியை டிஜிட்டல் வடிவத்திற்கு கொண்டுவந்து இருக்கின்றனர். ஆனால், இது இதோடு நிற்காது. கணினித் திறனும், எலி மூளையின் தரவுத் தொகுப்புகளும் அதிகரிக்கும்போது, நரம்பியல் விஞ்ஞானிகள், முழு எலி மூளையையும் டிஜிட்டல் வடிவிற்குள் கொண்டு வந்துவிடுவர். அப்போது, நரம்பியலாளர்கள், சூப்பர்கம்ப்யூட்டர் வேகத்தில், மூளைப் பரிசோதனைகளைச் செய்ய முடியும்.

