PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

01. ஐரோப்பிய விண்வெளி மையம் அனுப்பிய 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' விண்கலம் செவ்வாய் கோளில் உருவாகும் சிலந்திகளைப் படம் பிடித்துள்ளது. செவ்வாய் கோளில் பனிக்காலத்தில் உறைந்த கரியமில வாயு, வெயில் பட்ட உடன், உருகி உடையும்போது விரிசல்கள் உருவாகும். இவை பார்க்க சிலந்திகள் போல் தெரிகின்றன.
![]() |
02. மேற்கத்திய பாணி கழிப்பறையைப் பயன்படுத்தும்போது மூடியை மூடாமல் ப்ளஷ் செய்வதால் நுண்ணிய கிருமிகள் வெளியே பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த கொலரடோ பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, மூடி போட்டுவிட்டு ப்ளஷ் செய்வதே சரியான முறை எனப் பரிந்துரைத்துள்ளனர்.
![]() |
03. சனியின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டனை ஆராய விஞ்ஞானிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் வளிமண்டலம் நைட்ரஜன், மீத்தேனால் நிரம்பி இருப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். தட்டானை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'டிராகன் ப்ளை' எனும் விமானம் 2034ஆம் ஆண்டு டைட்டனுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என, நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
![]() |
04. சாதாரண வலி, காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து ஆஸ்ப்ரின். 4 ஆண்டுகள் 238 நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மருந்து, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதை 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து, புற்றுநோய்க்கு எதிராகச் செயலாற்றும் செல்களைத் துாண்டிவிடுவதே இதற்குக் காரணம்.




