PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

01. ராப்டர் எனும் ஒருவகை டைனோசர்கள், பறவைகள் போன்ற கால்களைக் கொண்டிருந்தன என்பது ஏற்கனவே அறியப்பட்ட விஷயம். இந்த ராப்டர்களில் ஒரு புது இனத்தைச் சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை, 16.4 அடி நீளம் வரை வளரும். இடுப்பிலிருந்து கால் வரை உள்ள உயரம் 6 அடி என்பதும் தெரிய வந்துள்ளது.
![]() |
02. மதுசாரா கொழுப்பு மிகு ஈரல் நோய் என்பது, மதுப் பயன்பாட்டினால் வருவதல்ல. மாறாக மரபியல், உடல் பருமன் இவற்றால் வருவது. ஐந்து நாட்கள் உண்பது, இரண்டு நாட்கள் விரதம் இருப்பது என்ற விரத முறையின் வாயிலாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
![]() |
03. புதிதாக அறிமுகமானவர்கள், ஏற்கனவே அறிந்தவர்களைக் காணும்போது வணக்கம் சொல்வது, கையசைப்பது மனிதர்களின் பழக்கம். ஆனால் யானைகள் என்ன செய்யும்? ஆப்பிரிக்க யானைகளைத் தொடர்ந்து கண்காணித்த ஆய்வாளர்கள் அவை தங்கள் நண்பர்களைப் பார்க்கும்போது தும்பிக்கையைத் துாக்குவது, காதுகளை அசைப்பது, வாலை ஆட்டுவது முதலிய செயல்களை செய்கின்றன என்கின்றனர். ஆனால், இதை விட சிறுநீர், கழிவு, வியர்வு வெளியேற்றுவதையே பிரதானமாகச் செய்கின்றன. இதிலிருந்து வரும் வாசனையை கொண்டே அவை தங்கள் நண்பர்களை அறிந்து கொள்கின்றன.
![]() |
04. உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான மூன்று அம்சங்கள் சூரிய ஒளி, திரவ நிலையில் உள்ள தண்ணீர், கரிமப் பொருட்கள் ஆகியவை தான். சனிக்கோளின் வளையத்தில் தண்ணீர் பனிக்கட்டிகளாக உள்ளது, கரிமப் பொருட்களும் உள்ளன என்பதால் அங்கு உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
![]() |
05. உரிய வயதில் பல் வளராதவர்கள் மற்றும் பல்லை இழந்தவர்களுக்கு, பல்லை வளர வைக்கும் சிகிச்சையை ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். பல் வளர்ச்சியைத் தடுக்கின்ற ஒரு வகை புரதத்தைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.