PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

01. முழுதும் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ஆடம்பர பயணியர் கப்பல் நெதர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 821 என்று அழைக்கப்படும். இதில், ஹைட்ரஜன் மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சேமிக்கப்படுகிறது.
![]() |
02. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உறுப்புகளை, நீண்டகாலம் கெடாமல் பாதுகாப்பது கடினமானது. சீனாவைச் சேர்ந்த ஃபூடான் பல்கலை விஞ்ஞானிகள் மெத்தில் செல்லுலோஸ் உள்ளிட்ட நான்கு வேதிப் பொருட்களைக் கொண்டு, மெடி (MEDY) எனப்படும் திரவத்தை உருவாக்கி உள்ளனர். இதில் 18 மாதங்கள் வரை மூளையைக் கெடாமல் வைத்திருக்க முடியும்.
03. அமெரிக்காவில் 30,000 முதியவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காகத் தொடர்ந்து, மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு வலிமை குறைவதால், சுலபமாக எலும்பு முறிவு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
04. கடலில் தத்தளிக்கும் மனிதர்களுக்கு உதவும் வகையில் TY -- 3R எனும் புதுவகை ட்ரோனை, சீனாவைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. தத்தளிப்பவர்களை நோக்கி இது பறந்து செல்லும். அவர்கள் இதைப் பற்றிக் கொண்டு நீந்தித் தப்பிக்கலாம்.
![]() |
05. மே 18ம் தேதி போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளின் வானில் விண்கல் ஒன்று நீல நிற ஒளியுடன் கடந்தது. பூமியிலிருந்து 60 கி.மீ., உயரத்தில் அட்லான்டிக் கடல் பகுதி மேலே இது சாம்பலானது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது.



