PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

01. தகவல்களைச் சேமிக்க மிகச்சிறந்த சாதனமாக இருப்பவை மரபணுக்கள் தான். உலகில் உள்ள மொத்த தகவல்களையும் தேநீர் கோப்பை அளவுள்ள மரபணுத் தொகுதியில் சேமித்து விடலாம். ஆனால், இவை எளிதில் சிதைந்துவிடும். இதைத் தடுக்க செயற்கை அம்பர் (Amber) கல்லைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
![]() |
02. வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பல நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசையால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆய்வுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த யு.சி.எல். பல்கலை மேற்கொண்டு வருகிறது.
![]() |
03. விலங்கு தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் லெதர் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் தாவரங்களில் இருந்து தோல் பொருட்கள் தயாரிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தாய்லாந்து விஞ்ஞானிகள் அன்னாசி தாவர இலைகளிலிருந்து லெதர் தயாரித்துள்ளனர். இது மற்ற தாவர லெதர்களை விட 60 மடங்கு வலிமையாக உள்ளது.
![]() |
04. புவியில் மிக உயரமான எரிமலைகளின் உச்சி, பனியால் மூடப்பட்டிருக்கும். அதேபோல் பனியால் மூடப்பட்டுள்ள எரிமலையை செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பனி, துருவத்தில் இருந்தால் பரவாயில்லை, செவ்வாயின் மத்திய பகுதியில் நேரடி சூரிய வெப்பம் படும் இடத்தில் இருப்பது தான் ஆச்சரியம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
![]() |
05. அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில், யானைகள் தங்கள் நண்பர்களை அழைக்கப் பல்வேறு விதமான ஒலிகளை எழுப்புகின்றன என்று தெரியவந்துள்ளது. இது மனிதர்கள் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பது போன்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.